Last Updated : 05 Feb, 2018 03:35 PM

 

Published : 05 Feb 2018 03:35 PM
Last Updated : 05 Feb 2018 03:35 PM

தனிநபர் வருமான வரி உயர்ந்தவுடன், கார்ப்பரேட் வரி குறைக்கப்படும்: ஹஸ்முக் அதியா தகவல்

தனிநபர் வருமான வரி வசூல் உயர்ந்து வருவதாக மத்திய அரசு எண்ணும்போது, கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

மத்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்று மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா பேசியதாவது-

சமீபகாலமாக கார்ப்பரேட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. ஆனால், நாங்கள் வரியை குறைக்க மறுக்கவில்லை. நாடு முழுவதும் கார்ப்பரேட் வருமானவரி குறைக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

பெரும்பாலான நாடுகளில் கார்ப்பரேட் வருமானவரியைக் காட்டிலும் தனிநபர் வருமானவரிதான் அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, தனிநபர் வருமானவரியைக் காட்டிலும் கார்ப்பரேட் வருமானவரிதான் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வருமானவரி செலுத்துவதில் கார்ப்பரேட், தனிநபர்கள் இடையே ஒழுங்கின்மை நீடித்து, ஒருபக்கம் மட்டுமே வளர்ந்து வருகிறது.

நீண்ட காலத்துக்கு பின் ஆண்டுக்கு ரூ.250 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனத்துக்கு கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைத்துள்ளோம். அதிகமான கார்ப்பரேட் வரி விதிப்பு காரணமாக, சமீகாலமாக வரிவசூல் அளவு குறைந்து வருகிறது.

கடந்த 2014-15ம் ஆண்டு 34.5 சதவீதம் வரிவசூல் இருந்த நிலையில், 2017-18ம் ஆண்டில் 28.18 சதவீதமாக குறைந்துவிட்டது.

இப்போதுள்ள நிலையில், மாதசம்பளம் வாங்குபவர்கள்தான் வர்த்தகர்களைக் காட்டிலும், அதிகமாக வருமானவரி செலுத்துகிறார்கள்.

கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் இடையே வருமான வரி செலுத்துவதில் இருக்கும் ஒழுங்கின்மை நிலை அகற்றப்படும். அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

2016-17ம் ஆண்டில் 1.89 கோடி ஊதியம் வாங்கும் பிரிவினர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. சராசரியாக ரூ.76,306 வருமான வரியாகச் செலுத்துகிறார்கள்.

அதேசமயம், 1.88 கோடி வர்த்தகர்கள் வருமான வரி செலுத்துகிறார்கள். இவர்கள் மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடிதான் வசூலாகிறது. இவர்கள் சராசரியாக ரூ.25 ஆயிரத்து 753 வரியாகச் செலுத்துகிறார்கள்.

நாட்டில் ஜிஎஸ்டி, பணமதிப்புநீக்கம் செயல்பாட்டுக்கு கொண்டுவந்ததில் இருந்து வருமானவரி செலுத்துபவர்களின் அளவு அதிகரித்துக் கொண்டுவந்துள்ளது. ஜிஎஸ்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவேபில் போன்றவை வரி ஏய்ப்பை தடுக்கும்.

இவ்வாறு ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x