Last Updated : 05 Feb, 2018 02:53 PM

 

Published : 05 Feb 2018 02:53 PM
Last Updated : 05 Feb 2018 02:53 PM

வயது வந்த ஆண்-பெண் விருப்பத் திருமணத்தில் மற்றவர் தலையிட உரிமையில்லை: சாதி ஆணவக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமுணம் செய்து கொள்வதில் தலையிட பெற்றோரோ அல்லது சமூகமோ தலையிட எந்தவித அதிகாரமும் கிடையாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

சாதி மாறி, குடும்ப விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும், கட்டப் பஞ்சாயத்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துது.

சாதி மாறி திருமணம் செய்பவர்களை இந்த கட்டப் பஞ்சாயத்து அமைப்புகள் பிரித்து வைப்பதும், அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவதும், ஆணவ கொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அமைப்பு கூறியிருந்தது. மேலும், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:

‘‘வயது வந்த ஆண் - பெண் இருபாலரும் விரும்பி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு தடை ஏதுமில்லை. சட்டம் இதனை முழுமையாக அங்கீகரிக்கிறது. அவர்களின் பெற்றோர், சமூகம் என யாருக்கும், இதில் தலையிட உரிமையில்லை. இதுபோன்ற திருமணங்களில் ஊர் பஞ்சாயத்து தலையிடுவதை ஏற்க முடியாது. அவ்வாறு தலையிட உரிமை ஏதும் இல்லை’’ என கூறினார்.

இந்த வழக்கில் ஆஜரான சமூக செயற்பாட்டாளர் மது கிஷ்வர்  கூறுகையில் ‘‘டெல்லியில் இளைஞர் அங்கீத் சக்சேனா, தனது காதலியின் பெற்றோரால் கொல்லப்பட்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கவுரவக் கொலை என கூறுவது மென்மையான போக்கு. மிக மோசமான குற்றமாக இவை அழைக்கப்பட வேண்டும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x