Published : 05 Feb 2018 11:32 AM
Last Updated : 05 Feb 2018 11:32 AM

மோடியின் பிராமிஸ் டூத்பேஸ்ட்: பிரகாஷ்ராஜ் கிண்டல்

பெங்களூரு நகரில் நேற்று நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசிய நிலையில், அது குறித்தும், பாஜக குறித்தும் நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அங்குள்ள எதிர்க்கட்சியான பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் முன்னோட்ட பிரச்சாரமாக, பெங்களூரு நகரில் நேற்று நடந்த பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் காங்கிரஸ் கலாச்சாரத்தை அகற்ற வேண்டும். நாட்டில் காங்கிரஸ் இல்லா சூழலை உருவாக்க வேண்டும். கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நிலை உயரும், உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மாநிலத்தில் செய்யப்படும். மாநிலத்தில் உள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சையும், பாஜகவையும் கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று ட்விட் செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

பிராமிஸ் டூத்பேஸ்ட் கடந்த 2014-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பல் துலக்க மறந்துவிட்டது. இதனால், விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போதும் பிராமிஸ் டூத்பேஸ்டை நம்புகிறீர்களா? கர்நாடகாவில் நேற்று நடந்த பேரணியில் பிராமிஸ் டூத்பேஸ் விற்கப்பட்டதே அதை நம்புகிறீர்களா?, அல்லது அதை வாங்கப்போகிறீர்களா?

இவ்வாறு பிரகாஷ்ராஜ்  தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த 2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் மறந்துவிட்டனர். இதனால், இளைஞர்கள் வேலையில்லாமலும், விவசாயிகள் வாழ்வில் செழிப்பு இல்லாமல் இருக்கிறது. இன்னும் பாஜக வாக்குறுதிகளை நம்புகிறீர்களா?. பெங்களூரு நகரில் நேற்று நடந்த பேரணியில் பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாரே அதை நம்புகிறீர்களா? அதை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா ? எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x