Published : 05 Feb 2018 09:00 AM
Last Updated : 05 Feb 2018 09:00 AM

அடியில் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ. தூரம் சடலத்துடன் பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது: பெங்களூருவில் அதிகாரிகள் அதிர்ச்சி

கர்நாடக அரசு பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல், 70 கி.மீ. தூரம் ஓட்டி சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூரில் இருந்து பெங்களூருவுக்கு கர்நாடக அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. தூங்கும் வசதி கொண்ட அந்த பேருந்தை மொகினுதீன் (45) ஓட்டிச் சென்றார்.

பெங்களூரு சாந்திநகர் டெப்போவை கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.35 மணிக்கு அடைந்ததும், பேருந்தை விட்டுவிட்டு ஓட்டுநர் மொகினுதீன் ஓய்வெடுக்க சென்று விட்டார். அதன்பின், பேருந்தை சுத்தப்படுத்த காலை 8 மணிக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியிருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக வில்சன் கார்டன் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து மொகினுதீனை கைது செய்தனர்.

போலீஸிடம் அவர் கூறும்போது, ‘‘குன்னூரில் இருந்து மைசூரு - மாண்டியா - சென்னப்பட்டனா வழியாக பெங்களூரு வந்தேன். சென்னப்பட்டனாவை அடைந்த போது ‘தொப்’பென்று ஏதோ சத்தம் கேட்டது. (அங்கிருந்து பெங்களூரு 70 கி.மீ. தூரம் உள்ளது.) உடனே இருபக்க கண்ணாடிகள் வழியே பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் பேருந்து அடியில் கல் ஏதாவது பட்டிருக்கும் என்று நினைத்து தொடர்ந்து ஓட்டி வந்தேன்’’ என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவருக்கு 30 முதல் 40-க்குள் வயதிருக்கும் என்று கூறுகின்றனர். விக்டோரியா மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகினுதீன் 10 ஆண்டு அனுபவம் உள்ள ஓட்டுநர். இதுவரை அவர் விபத்து ஏதும் ஏற்படுத்தியதில்லை.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விபத்தில் சிக்கியவர்கள் வாகனங்களில் சிக்கியபடி 200 அல்லது 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 70 கி.மீ. தூரம் எப்படி என்பது புதிராக இருக்கிறது’’ என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x