Published : 05 Feb 2018 08:48 AM
Last Updated : 05 Feb 2018 08:48 AM

இந்திய - சீன எல்லையில் உள்ள காஷ்மீர் ராணுவ முகாமில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

காஷ்மீர் மாநிலம் லடாக் மலைப் பகுதியில் இந்திய, சீன எல்லையான தோய்சி ராணுவ முகாமுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சென்றார். அங்கு வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர், எல்லை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு மோசமான வானிலையில் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கடந்த அக்டோபரில் சிக்கிம் மாநிலத்தில் இந்திய, சீன எல்லை பகுதியான நாதுலா ராணுவ முகாமுக்கு சென்று வீரர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த ஜனவரியில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்தார்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் லடாக் மலைப் பகுதியில் இந்திய, சீன எல்லையான தோய்சி ராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் அவர் ஹெலிகாப்டரில் சென்றார். உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் மலைச்சிகரத்துக்கு இங்கிருந்துதான் செல்ல முடியும். இது கடல் மட்டத்தில் இருந்து 10,070 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

தோய்சி ராணுவ முகாமில் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மலா ஆய்வு நடத்தினார். இதுகுறித்து ராணுவ வடக்கு பிராந்திய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் டி.அன்பு வெளியிட்ட அறிக்கையில், உறையவைக்கும் பனிப்பொழிவு, மலைப் பகுதியை பொருட்படுத்தாது அமைச்சர் தோய்சி முகாமுக்கு வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x