Published : 05 Feb 2018 07:18 AM
Last Updated : 05 Feb 2018 07:18 AM

மத்திய பட்ஜெட் விவகாரத்தில் கசப்புணர்வு நீடித்தாலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும்: தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு

மத்திய பட்ஜெட் விவகாரத்தில் கசப்புணர்வு நீடித்தாலும் இப்போதைக்கு பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவரும் மத் திய அமைச்சருமான ஒய்.எஸ். சவுத்ரி கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டிருப்பதால் தெலுங்கு தேச மும் மக்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனினும் மத் திய அரசிடம் தொடர்ந்து நிதியுதவியை கோருவோம். இப்போதைக்கு பாஜகவுடனான கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியின் மூத்த தலைவர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: பட்ஜெட் விவகாரத்தில் கசப்புணர்வு நீடித்தாலும் இப்போதைக்கு பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டாம் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆந்திராவுக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசிடம் கோருவோம். அதன்பிறகும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என் றால் முதல்வர் முக்கிய முடி வெடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தெலுங்கு தேச எம்.பி.க்கள் சிலர் கூறியபோது, “முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டால் அடுத்த நொடியே பதவியை ராஜினாமா செய்து விடுவோம். போலாவரம் அணை, தலைநகர் அமராவதி நிர்மாணத்துக்கு நிதி கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்” என்று தெரிவித்தனர்.

பட்ஜெட் விவகாரம் தொடர் பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பொறுத்திருந்து முடிவெடுக்க தெலுங்கு தேசம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஒய்.எஸ்.சவுத்ரி மறுத் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x