Published : 01 Feb 2018 07:09 PM
Last Updated : 01 Feb 2018 07:09 PM

‘மிக்க நன்றி, இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கு’:பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கிண்டல்

 

பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, மிக்க நன்றி இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டலாக ட்விட் செய்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் 5-வது முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பட்ஜெட் குறித்து இன்று வெளியிட்ட பதிவில் “ 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. கவர்ச்சித்திட்டங்களும் பட்ஜெட்டுக்கு பொருத்தமாக இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நன்றி, இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் முகம்மது சலிம் நிருபர்களிடம் கூறுகையில், “ அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். பாஜக தனக்கான பிரசார களமாக பட்ஜெட்டை பயன்படுத்துகிறது. முன்கூட்டியே தேர்தலை நடத்த போடும் திட்டமாகும். இளைஞர்கள் அனைவரும் பக்கோடா விற்க முடியாது. வேலைவாய்ப்புக்கும், முதலீட்டுக்கும் இடையே மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி ராஜா பட்ஜெட் குறித்து நிருபர்களிடம் கூறுகையில், “ இது வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், வேளாண் வளர்ச்சி 12 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.அது இல்லை. கடந்த பட்ஜெட் போலவே பல்வேறு திட்டங்களை இந்த பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது. ஆனால், புதியதாக ஒன்றும் இல்லை. எஸ்சி பிரிவினரும்,பழங்குடியினருக்கும் எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அமைதியாக இருந்துவிட்டது “ எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம்:

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்ரில் பட்ஜெட் குறித்து கூறுகையில், “ பிஹார் மாநிலத்துக்கு எந்த திட்டமும் இல்லை. மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி :

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பட்ஜெட் குறித்து கூறுகையில், “ டெல்லிக்கு சிறப்பு நிதி உதவித் திட்டம், சிறப்பு கட்டமைப்பு வசதி திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் இன்னும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையில் நடப்பது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி:

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் கூறுகையில், “ பொய்யான வாக்குறுதிகளையும், வெற்றுப் பேச்சுகளையும் பேசுவதைத் தவிர்த்து, தேர்தலின் போது மக்களுக்கு வாக்களித்த நல்ல காலம் எப்போது வரும் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி:

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “ ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பட்ஜெட் அறிவிப்பை கேட்டு வேதனை அடைகிறார்கள். வர்த்தகர்கள், பெண்கள், நடுத்தர குடும்பத்தினர், சமானிய மக்களின் முகத்தில் அறைந்தது போன்று பட்ஜெட் இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை மறந்துவிட்டு பிடிவாத குணம் கொண்ட அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டாகும். இது அழிவுக்கான பட்ஜெட். பாஜகவுக்கு இதுதான் கடைசி பட்ஜெட்டாக இருக்கும். தேர்தலில் மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x