Last Updated : 01 Feb, 2018 06:19 PM

 

Published : 01 Feb 2018 06:19 PM
Last Updated : 01 Feb 2018 06:19 PM

வெறும் அறிவிப்புகளின் அறிக்கையாக பட்ஜெட்: டிகேஎஸ் இளங்கோவன் கருத்து

மத்திய அரசால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் வெறும் அறிவிப்புகளின் அறிக்கையாக இருப்பதாக மாநிலங்களவையின் திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிகேஎஸ் இளங்கோவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''விரைவில் தேர்தலை சந்திக்கும் எண்ணத்துடன் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி ஆகியவற்றுக்கு எந்த திட்டங்களும் இல்லை. அளிக்கப்பட்டுள்ள சில அறிவிப்புகள் என்ன பலனைத் தரும் எனத் தெரியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆட்சி பல அறிவிப்புகளை செய்துள்ளது. ஆனால், அந்த அறிவிப்புகளுக்கான பலன் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதிநிலை பட்ஜெட்டும் வெறும் அறிவிப்புகளுக்கானதுமாக உள்ளது. சிறுகுறு தொழில் முன்னேற்றம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகர்களை தடுக்கவும் எந்த திட்டமும் இல்லை. விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பும் செய்யப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயம் இல்லை. அதன்நிலை அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் எந்த அளவுகோலை வைத்து இவர்கள் நாட்டின் விவசாயிகள் விளைபொருள் 2022-ம் ஆண்டில் இரட்டிப்பாகும் எனக் கூறி உள்ளனர் என்பது தெரியவில்லை. இன்று விவசாயிகள் வங்கிக்கடனால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டும், வேறு தொழில்களுக்கு மாறுவதிலும் உள்ளனர்.''

இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x