Published : 01 Feb 2018 08:39 AM
Last Updated : 01 Feb 2018 08:39 AM

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை பெற்றுத்தர முறைகேடாக பணம் வாங்கிய தாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக 2 லுக் அவுட் நோட்டீஸ்களை சிபிஐ பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 28 ஆகிய தேதிகளில் இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப் பட்டன.

இவற்றுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்தது. ஆனால் இது சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டது இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் லுக் அவுட் நோட்டீஸ்களுக்கு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுக்களை விசாரித்தது.

அப்போது லுக் அவுட் நோட்டீஸ்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். கார்த்தி சிதம்பரத்தின் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமர்வு 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அதுவரை அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்கள் செயல்பாட்டில் இருக்கும் என்ற தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினால் தகுதியின் அடிப்படையில் உயர் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஊழல் வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தொடர்பான பிற மனுக்களை தாங்களே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x