Last Updated : 01 Feb, 2018 08:24 AM

 

Published : 01 Feb 2018 08:24 AM
Last Updated : 01 Feb 2018 08:24 AM

பாஜக தலைவர்கள் பலர் எனக்கு ஆதரவாக உள்ளனர்: யஷ்வந்த் சின்ஹா

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரிய மன்ச் (தேசிய மேடை) என்ற பெயரிலான அரசியல் அமைப்பை நேற்று முன்தினம் அமைத்துள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

நாட்டு மக்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறினீர்கள். இதுபற்றி விளக்க முடியுமா?

பொதுமக்கள் உட்பட பலரது மனதில் அரசு மீதான அச்சம் நிச்சயம் உள்ளது. இவர்களை ஏதாவது ஒரு வகையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்புகள் துன்புறுத்தி வருகின்றன. பொய் வழக்கு உட்பட ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்க வைக்கப்படலாம் என மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற நிலை நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் மட்டுமே இருந்து. அப்போது அதிகாரப்பூர்வ நெருக்கடிநிலை இருந்தது. இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை உள்ளது.

உங்களுக்கு சத்ருகன் சின்ஹா ஆதரவளித்துள்ளார். பாஜகவில் இருந்து மேலும் வருவார்களா?

சத்ருகனை போல் பாஜகவில் இருந்து பலரும் எனது செயலுக்கு முழு ஆதரவளித்துள்ளனர். ஆனால் அச்சம் காரணமாக வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனர். இவர்கள் விரைவில் என்னுடன் வரவுள்ளனர்.

அடுத்த மக்களவை தேர்தல் முன்கூட்டியே வரும் என கூறப்படுகிறதே...

இது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனினும் தேர்தல் முன்கூட்டியே வந்தால் அதை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதா? அல்லது பாஜகவுக்கு எதிரானதா?

நான் தொடங்கியுள்ள அமைப்பு எவருக்கும் எதிரானதல்ல. இன்றைய தேதியில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை மக்கள் முன் எடுத்துரைக்கும் பணியை இந்த அமைப்பு செய்யும். மக்களுக்கு இதன் மீதான விழிப்புணர்வு ஏற்கெனவே உள்ளது. எனினும் அப்பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை எங்கள் அமைப்பு எடுத்துக்கூறும்.

எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் கைகோர்ப்பதை பாஜக அனுமதிக்குமா?

நான் எந்த அரசியல் கட்சியுடனும் கைகோர்க்கவில்லை. என்னுடன் உள்ள மாற்றுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆதரவு அளித்துள்ளார்களே தவிர தங்கள் கட்சி சார்பில் அல்ல.

உங்கள் அமைப்பு அரசியல் கட்சியாகி தேர்தலில் போட்டியிடுமா? அல்லது எதிர்க்கட்சிகளை மட்டும் ஒன்றிணைக்குமா?

இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிட எதிர்காலத்திலும் வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியிலும் இறங்காது. பொதுமக்கள் பிரச்சினைகளை மட்டும் தொடர்ந்து எழுப்பும்.

பாஜகவில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயல்படுவது சரியா? இதை உங்கள் கட்சி அனுமதிக்கிறதா?

எனது செயலுக்கு பாஜகவில் அனுமதி உள்ளதா எனத் தெரியவில்லை. ஒருவேளை அனுமதிக்காமல் கட்சியை விட்டு நீக்கினாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். கட்சியை விட்டு வெளியேற்றும்போது அதற்கு நான் உரிய பதில் அளிப்பேன்.

உங்கள் நடவடிக்கைகளை மத்திய இணை அமைச்சரான உங்கள் மகன் ஆதரிக்கிறாரா? உங்களின் எதிர்ப்பு அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாதா?

அவர் எனக்கு ஆதரவளிக்கவில்லை. நாங்கள் இருவரும் இந்தப் பிரச்சினையில் தனிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள். இதனால் அவர் மீது இதன் தாக்கம் விழ வாய்ப்பில்லை.

அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பதால் மத்திய அரசை எதிர்ப்பதாக பத்திரிகைகளில் எழுதப்படுகிறதே?

என்னை பற்றி தவறாக எழுதுவோர் மிகவும் சிறிய புத்தி கொண்டவர்கள். அவர்களுக்கு எனது பின்னணி தெரியாது. ஐஏஎஸ் அதிகாரி பணியை 1984-ல் நான் ராஜினாமா செய்தபோது 12 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தது. மேலும் பதவி உயர்வு உட்பட எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் தேசப்பணிக்காக அரசுப் பணியை நான் ராஜினாமா செய்தேன். 1989-ல் பிரதமராக இருந்த வி.பி.சிங் என்னை மத்திய இணை அமைச்சராக்க விரும்பினார். இதற்காக நான் குடியரசுத் தலைவர் மாளிகை வரை சென்று, கேபினட் பதவிக்கு குறைவான இணை அமைச்சர் பதவி என அறிந்தேன். எனது திறமையை குறைவாக மதிப்பிட்டுள்ளதாகக் கருதி அந்தப் பதவி வேண்டாம் எனத் திரும்பி விட்டேன். அடுத்து எனக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி அளிக்க வி.பி.சிங் முன்வந்தபோதும் நான் ஏற்கவில்லை.

கடந்த தேர்தலிலும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் எதிர்க்கிறீர்களா?

கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடாததற்கு நான் அதை விரும்பவில்லை என்பதே காரணம். நான் அமைச்சராக விரும்பியிருந்தால் கண்டிப்பாகப் போட்டியிட்டிருப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x