Published : 01 Feb 2018 07:43 AM
Last Updated : 01 Feb 2018 07:43 AM

மாமனார், மாமியார், மைத்துனி பெயரில் வாங்கிய வீடு பறிமுதல்; நடிகர் ஷாருக் கானுக்கு நோட்டீஸ் - பினாமி சொத்து என வருமான வரித்துறை நடவடிக்கை

மாமனார், மாமியார், மைத்துனி பெயரில் ஹிந்தி நடிகர் ஷாருக் கான் சொத்து வாங்கியுள்ளார். இதையடுத்து அவரது பங்களாவை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த சொத்து பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்றும் அறிவித்துள்ளனர்.

ஹிந்தி சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்புத் தொழில் மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஷாருக் கான் பினாமி பெயரில் சொத்து வாங்கியதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி சொத்தை பறிமுதல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம் அலிபாக் பகுதியில் அந்த பங்களா அமைந்துள்ளது. அந்த சொத்தானது தேஜாவூ பார்ம்ஸ் என்ற நிறுவனம் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. 2004-ல் தேஜாவூ பார்ம்ஸ் இயக்குநர் மோரேஷ்வர் அஜ்காவ்ங்கர் பெயரில் இந்த பங்களா பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ரூ.14.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.250 கோடி இருக்கும் என தெரிகிறது.

சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணை வீடானது, நீச்சல் குளம், ஹெலிபேட் வசதிகள் கொண்டது. மேலும் பல கோடி ரூபாயை செலவழித்து இந்த பண்ணை வீட்டில் பல வசதிகளை உருவாக்கியுள்ளார். உள் அலங்கார வசதிக்காக பல கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டில் இந்த நிறுவனத்துக்கு ஷாருக் கான் ரூ.8.5 கோடியை கடனாகக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர்களாக நமிதா சிபா, ரமேஷ் சிபா, சவிதா சிபா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் முறையே ஷாருக் கானின் மைத்துனி, மாமனார், மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சொத்தை வாங்கிய பின்னர் அங்கு விதிகளை மீறியும், அனுமதி வாங்காமலும் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தைப் பதிவு செய்துவிட்டு நீச்சல் குளத்தை அங்கு அமைப்பது சட்டவிரோதமானதாகும். இது அலிபாக் வட்டாட்சியர் அலுவலகத்துக்குத் தெரியவந்தது. இதையடுத்து நோட்டீஸை ராய்கட் ஆட்சியர் டாக்டர் விஜய் சூர்யவன்ஷி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை வருமான வரித்துறை கையில் எடுத்து தற்போது பண்ணை வீட்டை பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடர்பாக ஷாருக் கான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயிலுக்கும் இதுதொடர்பான தகவல் அனுப்பப்படுள்ளது. மேலும், பினாமி பெயரில் சொத்து வாங்கியதாக ஷாருக் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கண்ட 90 நாட்களுக்குள் நடிகர் ஷாருக் கான், பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஷாருக் கானை பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் பதிலளிக்கவிரும்பவில்லையென அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x