Last Updated : 06 Jan, 2018 06:30 PM

 

Published : 06 Jan 2018 06:30 PM
Last Updated : 06 Jan 2018 06:30 PM

பெங்களூருவில் ஆயிரக்கணக்கான மாணவர்களை கலங்க வைத்த நல்லாசிரியரின் மறைவு: அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ உடல் நல்லடக்கம்

மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ (67) உடல் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ (67), தனது 18-வது வயதில் இயேசு சபையில் இணைந்தார். இறையியல் படித்து குரு பட்டம் பெற்ற இவர், அருட்பணியில் இருந்தவாறு சமூக பணிக்கு தன்னை முழுமையாக அர்பணித்தார். அரசியல் அறிவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆம்ரோஸ் பின்ட்டோ பெங்களூரு செயிண்ட் ஜோசப், மங்களூரு செயிண்ட் அலாய்சியஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக‌ பேராசியராக பணியாற்றினார்.

இதையடுத்து பெங்களூரு செயிண்ட் ஜோசப் மாலை கல்லூரியின் தாளாளராக பொறுப்பேற்ற இவர் ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க வழிவகுத்தார். இதே போல‌ செயிண்ட் அலாய்சியஸ் கல்லூரியிலும் தலித், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க உதவினார். டெல்லி,பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது, ஏராளமான ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். இவரது மேற்பார்வையின் கீழ் வெளியான ஆய்வு நூல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்திய அளவில் அரசியல் அறிவியல் துறையில் சிறந்த பேராசிரியராகவும், சிந்தனையாளராகவும் விளங்கிய ஆம்ரோஸ் பின்ட்டோ நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கிறிஸ்துவ பாதிரியாராக இருந்த போதும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை, அணு உலை எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார்.

அன்றாட அரசியல் விமர்சனம், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் உரிமை, தலித் விடுதலை, பெண் உரிமை, எளியோர் முன்னேற்றம், இந்துத்துவ எதிர்ப்பு உள்ளிட்ட தலைப்புகளை மையமாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். முற்போக்கு கருத்துக்கள் நிரம்பிய இவரது கட்டுரைகள் ஆங்கில நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் தொடர்ந்து வெளியாகின. தலித் மக்களின் அரசியல் விடுதலை, தலித் கிருஸ்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

கல்வி துறையிலும், சமூக துறையில் சிறந்து விளங்கிய அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ கர்நாடக அரசின் கல்வி துறையிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஆலோசகராக பதவி வகித்துள்ளார். இவரது சமூக சேவையை பாராட்டி கர்நாடக அரசு கடந்த 2010-ம் ஆண்டு ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதே போல கர்நாடகாவின் சிறந்த தாளாளர் (கல்லூரி முதல்வர்), சிபிசிஐ நிறுவனத்தின் சிறந்த பத்திரிகையாளர் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

பெங்களூரு செயிண்ட் அலாய்சியஸ் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ நேற்று முன் தினம் காலமானார். இதையடுத்து நேற்று பெங்களூருவில் செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் பேராயர் பெர்னார்ட் மோரஸ் இறுதி திருப்பலி நிறைவேற்றினார்.

அதில் கர்நாடக அமைச்சர்கள் ஆஞ்சநேயா, ஜார்ஜ் உட்பட எம்பி, எம்எல்ஏக்களும், ஏராளமான அரசு அதிகாரிகளும், கிறிஸ்துவ பாதிரியார்களும், கன்னியர்களும் பங்கேற்றனர். ஆம்ரோஸ் பின்ட்டோவின் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆம்ரோஸ் பின்ட்டோவின் உடல் பன்னாருகட்டா சாலையில் உள்ள மவுண்ட் ஃபோர்ட் கல்லறைக்கு கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், கிறிஸ்துவ துறவிகளும் கண்ணீர் விட்டு கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x