Published : 06 Jan 2018 05:39 PM
Last Updated : 06 Jan 2018 05:39 PM

ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம்: மக்களவை சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அனுப்பி வைத்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல் முடங்கியது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களைச் சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார். இதற்கு ராகுல் காந்தி, “பிரதமர் மோடி நினைப்பது ஒன்று, பேசுவது வேறு என தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என கிண்டல் செய்தார்.

இதையடுத்து மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அவை விதி 187-ன் கீழ் பாஜக உறுப்பினர் புபிந்தர் யாதவ் நோட்டீஸ் அளித்தார்.“மாநிலங்களவை பாஜக தலைவர் அருண் ஜேட்லியை ராகுல் வேண்டுமென்றே அவமரியாதை செய்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த நோட்டீஸ் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், இது மக்களவை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என, மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில் உரிமை மீறல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதுவதால் அதை மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, வெங்கய்ய நாயுடு அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீதான விமர்சனத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருத இடமுள்ளது’’ எனக் கூறியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x