Published : 06 Jan 2018 05:20 PM
Last Updated : 06 Jan 2018 05:20 PM

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழலில் லாலு மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாஸ்பாஸா கருவூல மோசடியில் 2013-ம் ஆண்டில் அவருக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர் மீதான 2-வது கால்நடைத் தீவன வழக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அன்றைய தினம் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பிருந்தேஸ்வரி பிரசாத் காலமானதால் தண்டனை விவர அறிவிப்பு ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று/முன்தினம் தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிபதி சிவபால் சிங் கூறுகையில், ''லாலுவின் ஆதரவாளர்கள் பலர் தொலைபேசியில் பேசினர். நான் சட்டத்தை மட்டுமே பின்பற்றுவேன்'' என்று தெரிவித்தார்.

பின்னர் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அதுவும் இன்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று லாலு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற நடைமுறை தொடங்கியது. இதைத்தொடர்ந்து தண்டனை விவரங்களை நீதிபதி சிவபால் சிங் அறிவித்தார். அதன்படி லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் மூன்றரை ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாலுவுக்கு ஜாமின் வழங்கக்கோரி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் திங்களன்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என, அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார் கூறினார். லாலு பிரசாத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.கால்நடைத் தீவன ஊழல் புகாரில் லாலு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x