Published : 06 Jan 2018 11:32 AM
Last Updated : 06 Jan 2018 11:32 AM

உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியல்: முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை

இந்தியாவில் உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அகில இந்திய அளவில், 2016 -2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் 18 -23 வயது கொண்டவர்கள் உயர் கல்வியில் சேரும் அளவை கணக்கிட்டு இந்த பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நாடுமுழுவதும் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம், 46.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த மாணவர்களின் பட்டியல் மட்டுமின்றி ஆண்- பெண் விகிச்சார அடிப்படையிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேரும் விகிச்சார அடிப்படையிலும் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் பெண்கள் 45.6 சதவீதமாகவும், ஆண்கள் 48.2 சதவீதமாகவும் உள்ளனர்.

உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பட்டியலில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. நாட்டின் சராசரி அளவு 35.7 சதவீதமாக உள்ள நிலையில், பீகார் 14.4 சதவீதமும், அசாம் 17.2 சதவீதமும், ஒடிசா 18.5 சதவீதமும், மேற்குவங்கம் 21 சதவீதமும் பெற்று கடைசி இடங்களில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 24.9 சதவீதமாக உள்ளது.

இந்தப்பட்டியலில் யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை 56.1 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உயர் கல்வியில் சேருபவர்களின் பட்டியலை பொறுத்தவரை 2012 -13 கல்வியாண்டில் 30.2 சதவீதமாக இருந்த எண்ணிக்கை, 2016- 17ல் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது"

இவ்வாறு உயர் கல்வியில் சேருபவர்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x