Last Updated : 06 Jan, 2018 09:37 AM

 

Published : 06 Jan 2018 09:37 AM
Last Updated : 06 Jan 2018 09:37 AM

முஸ்லிம்கள் வங்கிகளில் பணியாற்றுவது ஷரீயத்திற்கு எதிரானது: உ.பி.யின் தியோபந்த் தாரூல் உலூம் மதரசா விளக்கம்

முஸ்லிம்கள் வங்கிகளில் பணியாற்றுவது ஷரீயத்திற்கு எதிரானது என உ.பி.யின் தியோபந்த் நகரில் உள்ள தாரூல் உலூம் மதரசா ‘ஃபத்வா’ பிறப்பித்துள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உ.பி. முஸ்லிம் ஒருவர் தனது மகளுக்கு வங்கியில் பணியாற்றும் மாப்பிள்ளைக்கு மணமுடித்து தரவேண்டி தியோபந்த் தாரூல் உலூம் மதரசாவில் சில தினங்களுக்கு முன் ஃபத்வா கேட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், “வட்டியால் பெறும் வருமானம் ‘ஹராம் (இஸ்லாமிய மதச்சட்டத்திற்கு எதிரானது)’ என்பதால், முஸ்லிம்கள் வங்கிகளில் பணியாற்றுவதும் ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது” என அந்த மதரசாவின் முப்திகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த ஃபத்வாவில், “இதுபோன்ற குடும்பத்தாருடன் திருமண உறவு வைப்பதை தவிர்க்க வேண்டுமே தவிர விருப்பம் காட்டக் கூடாது. ஹராம் மூலம் தொகை ஈட்டி வாழ்பவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் உள்ளுணர்வு மற்றும் ஒழுக்கத்தில் மரியாதை கிடைக்காது. ஆகையால், இது தவிர்க்கப்பட்டு தயாள குணம் கொண்ட குடும்பத்தினருடன் திருமண உறவு வைக்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியம் எதிர்ப்பு

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் முஸ்லிம்களும் கணிசமான அளவில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் தாரூல் உலூம் மதரசா அளித்துள்ள ஃபத்வாவால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் கிளம்பியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அந்த ஃபத்வாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளளது. மேலும் அந்த ஃபத்வாவை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகத் தலைவர் காலீத் ரஷீத் ஃபிராங்கி மெஹலி கூறும்போது, “வங்கிகளில் பணியாற்றும் முஸ்லிம்களுடன் திருமண உறவு கூடாது என்ற ஃபத்வா தவறானது ஆகும். இதை அளித்தவர்கள் அதை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், இது முஸ்லிம் சமூகத்தில் பிளவையும் குழப்பத்தையும் ஏற்படுத்திவிடும். இதுபோன்ற விஷயங்களில் ஃபத்வா வெளியிடுவதே தேவையில்லாத ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஷரீயத் சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் அதில் ஏற்படும் சந்தேகங்கள் மீது முப்திகளிடம் விளக்கம் கேட்பது வழக்கம். ஷரீயத் சட்டத்தை முழுமையாக அறிந்தவர்களாகக் கருதப்படும் முப்திகள் இதற்கு அளிக்கும் விளக்கம் ஃபத்வா என்று அழைக்கப்படுகிறது. தியோபந்த் தாரூல் உலூம் மதரசாவின் முப்திகளால் அளிக்கப்படும் ஃபத்வாவுக்கு இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், வங்கிகள் மீதான ஃபத்வாவிற்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தாரூல் உலூம் மதரசாவின் மக்கள் தொடர்பு அதிகாரியான அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, “முப்திகளால் அளிக்கப்படும் ஃபத்வா என்பது ஷரீயத்தின் அடிப்படையில் அளிக்கப்படுவது ஆகும். முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் தற்போதைய சூழலை மனதில்கொண்டு கூறும் கருத்துகளால் ஷரீயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் போல் தாரூல் உலூம், முஸ்லிம்களால் மதிக்கப்படுகிறது. எனவே, ஷரீயத்தின் மீதான சந்தேகத்தை தீர்க்கும் தங்கள் கடமையை எங்கள் மதரசா முப்திகள் செவ்வனே செய்துள்ளனர். வட்டி மூலம் வருமானம் பெற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனினும் வேறு வழியின்றி அவர்கள் பணிபுரிகிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்கள் தொடர்ந்து தங்கள் இறப்பு வரை வேறுபணிக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாயம் ஆகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x