Last Updated : 10 Dec, 2017 01:28 PM

 

Published : 10 Dec 2017 01:28 PM
Last Updated : 10 Dec 2017 01:28 PM

ஜோதிடரின் யோசனை ஏற்பு: அசைவ பிரியரான லாலு சைவ உணவுக்கு மாறினார்

அசைவ பிரியரான லாலு, சைவ உணவிற்கு மாறியுள்ளார். வருமான வரித்துறை உட்படப் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க ஜோசியர் அளித்த ஆலோசனையை அவர் ஏற்றதாக தெரியவந்துள்ளது.

நன்கு வறுத்த மீன் மற்றும் கோழி ராஷ்ட்ரிய ஜனதா தலைவரான லாலுவின் விருப்பமான அசைவ உணவு. ஆனால், அவற்றை முற்றிலும் தவிர்த்து லாலு தற்போது சைவ உணவிற்கு மாறி விட்டார். இவ்வாறு அவர் மாறியது அன்றி, பொதுமக்களும் சைவ உணவை உட்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை அவர் நேற்று ஒரு நூல் வெளியிட்டு விழாவில் பேசிய போது தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகரான பாட்னாவின் கியான் பவனில் நேற்று புத்தகக் கண்காட்சி துவங்கியது.

இதன் நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட லாலு பேசும்போது, ‘பொதுமக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டுமானால் சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாக நானும் கோழி, முட்டை, மீன் மற்றும் ஆட்டு கறி வகைகள் உண்பதை நிறுத்தி விட்டேன்.’ எனத் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் லாலுவின் உடல் நலத்தை விட அவருக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள் காரணம் எனக் கூறப்படுகிறது. பிஹாரில் மெகா கூட்டணி உறுப்பினராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் அதை உடைத்தார். பிறகு பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்ததில் இருந்து லாலுவிற்கு கடும்

அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அவரது வீட்டில் நிகழ்ந்த வருமானவரித்துறையினர் சோதனையில் லாலு மீது பல வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. இதில், மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதியும் மற்றும் மகன் தேஜ் பிரதாப் யாதவும் சிக்கியுள்ளனர். லாலு, மத்திய ரயில்துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்றதாக ஊழல் வழக்குகளும் பதிவாகி நடைபெற்று வருகின்றன. இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக லாலுவிற்கு சொந்தமான ரூபாய் 40 கோடி மதிப்புள்ள நிலமும் அரசால் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்து தனக்கு ஏற்பட்டு வரும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட லாலு முயன்று வருகிறார். இதற்காக தனது ஆஸ்தான ஜோதிடரும் தம் கட்சியை சேர்ந்தவருமான பண்டித் சங்கர் சரண் திரிபாதியிடம் அணுகியுள்ளார். இதில் திரிபாதி அசைவத்தை முற்றிலும் தவிர்த்து வெறும் சைவ உணவுகளை ஏற்கும்படி கூறியதை லாலு ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடு தான் அவர் நூல் வெளியிட்டில் அளித்த கருத்து எனவும் கருதப்படுகிறது.

பிஹாரில் பிரபல ஜோதிடராகக் கருதப்படும் பண்டித் சங்கர் சரண் திரிபாதி சமீபத்தில் லாலுவால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x