Published : 10 Dec 2017 09:09 AM
Last Updated : 10 Dec 2017 09:09 AM

குஜராத் முதல்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குப் பதிவு: 89 தொகுதிகளில் அமைதியான முறையில் நடந்தது

குஜராத் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

சில மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வேறு இயந்திரங்கள் பொருத்தப்பட்டதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபாட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன் கூறும்போது, “பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் இல்லாமல் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 70.7 சதவீத வாக்குகள் பதிவானது” என்றார்.

முதல்கட்டத் தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மாநில முதல்வர் விஜய் ரூபானி, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஷக்திசிங் கோஹில் ரேஷ் தனானி ஆகியோர் குறிப்பிடத்தக்க தலைவர்கள் ஆவர்.

பரூச் பாவ்நகர், கொண்டல் மற்றும் சூரத் உள்ளிட்ட இடங்களில் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர். ராஜ்கோட் மாவட்டம் உப்லெட்டா நகரில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 115 வயதுடைய ஒரு மூதாட்டி வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x