Last Updated : 10 Dec, 2017 09:28 AM

 

Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

குஜராத் தேர்தல் களத்தில் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை 2 அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) ஆய்வு செய்தன. அதில் 397 கோடீஸ்வரர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 2 கட்டங்களாக 182 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 1,828 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,098 பேர் 12-ம் வகுப்பு அல்லது அதற்கும் கீழே படித்தவர்களாக உள்ளனர்.

118 பெண் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர் என்று ஆய்வு நடத்திய என்ஜிஓ-க்களான ஏடிஆர், ஜிஇடபிள்யூ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதேபோல 2-ம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 851 வேட்பாளர்களில் 199 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொத்தம் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். 397 கோடீஸ்வர வேட்பாளர்களில் 131 பேர் ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர். இதில் 124 பேர் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை அசையும் மற்றும் அசையா சொத்து வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர்.

இதில் 142 பேர் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்கள். அதே போல காங்கிரஸைச் சேர்ந்த 127 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்று சொத்துக் கணக்கு காட்டியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 பேரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 பேரும், 56 சுயேச்சைகளும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மீதமுள்ள கோடீஸ்வரர்கள் மாநில கட்சிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

காங்கிரஸை சேர்ந்த தஸ்க்ரோய் தொகுதி வேட்பாளர் பங்கஜ் படேல் ரூ.231.93 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அதே கட்சியைச் சேர்ந்த இந்திரனில் ராஜ்யகுரு (ராஜ்கோட்-மேற்கு தொகுதி) ரூ.141.22 கோடி சொத்துகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

போதத் தொகுதி பாஜக வேட்பாளர் சவுரவ் படேல் ரூ.123.78 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளார். வாத்வான் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தன்ஜிபாய் படேல் ரூ.113.47 கோடியுடன் அதற்கடுத்த இடத்தில் இருக்கிறார். இதனிடையே 6 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x