Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

ஓட்டலை சிதம்பரத்தின் உறவினர் அபகரிக்க அதிகாரிகள் உதவி: டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு

திருப்பூர் ஓட்டலை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் அபகரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் உதவினர் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கதிர்வேல், சிபிஐ இயக்குநரிடம் அளித்த புகாரில், திருப்பூரில் ‘கம்பர்ட் இன்’ என்ற ஓட்டலை பத்மினி (ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி) உட்பட சிலருடன் சேர்ந்து நடத்தி வந்தேன். அந்த ஓட்டலின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் அதிகம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2.5 கோடி கடன் இருந்தது. இந்த கடனுக்காக வங்கி அலுவலர்கள் உதவியுடன் அவசரமாக நடந்த ஏலத்தில் ரூ.4.5 கோடிக்கு பத்மினி ஓட்டலை அபகரித்து கொண்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார். தனது மனுவில் சிதம்பரம், அவரது குடும்பத்தினர், வங்கி அதிகாரிகள் மீதும் கதிர்வேல் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் நீதிபதி முக்தா குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் கூறியதாவது: திருப்பூர் ‘கம்பர்ட் இன்’ ஓட்டல் வழக்கு விசாரணையில் இருந்துள்ளது. வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தீர்ப்பு வெளியாகும் வரை வங்கி அதிகாரிகள் காத்திருப்பது வழக்கம். ஆனால் திருப்பூர் ஓட்டல் விவகாரத்தில் தலைமை அலுவலக அழுத்தத்தின்பேரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் அவசரமாக ஏலம் நடத்தி பத்மினிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x