Last Updated : 13 Oct, 2017 09:02 PM

 

Published : 13 Oct 2017 09:02 PM
Last Updated : 13 Oct 2017 09:02 PM

பிரதமர் மோடியை வசைபாடிய கர்நாடக அமைச்சரால் கிளம்பியது சர்ச்சை

 

கர்நாடக அமைச்சர் ஆர்.ரோஷன் பெய்க் பிரதமர் நரேந்திர மோடி மீது தகாத வசைச்சொல்லைப் பிரயோகப்படுத்தியது பாஜக மத்தியில் கடும் கோபமான எதிர்வினைகளைக் கிளப்பியுள்ளது.

புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதி, இங்கு பெருமளவு தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 3 நாட்களுக்கு முன்பாக கட்சித் தொண்டர்களிடையே தமிழில் பேசிய ரோஷன் பெய்க் , “மோடியை பிரதமராக ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பிறகு அவரது ஆதரவாளர்கள் அவரை தேசத்தின் மகன் என்று ஆராதித்தனர். ஆனால் இப்போது என்ன ஆனது? ஆயிரம் ரூபாய் நோட்டைத் தடை செய்தார், 500 நோட்டை தடை செய்தார்” என்று கூறி அவரைப் பாராட்டியவர்களே இன்று ’நோட் பந்தி’ காரணமாக அவரை வசைபாடுகின்றனர் என்று கூறும்போது தகாத வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியது வீடியோவில் பதிவாகி வெளியானது.

மேலும் பிரதமரை ஆதரித்தவர்கள் குஜராத்திகள், மார்வாரிகள் ஆனால் அவர்களே இன்று அவரை திட்டுகின்றனர், காங்கிரஸ்காரர்கள் அல்ல என்றார்.

அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை தற்போது பாஜகவினரிடையே கடும் கோபங்களை கிளப்பியுள்ளது. கட்சியின் லோக்சபா உறுப்பினர் ஷோபா கரண்ட்லஜே என்பவர் ‘இதுதான் காங்கிரஸ் பண்பாடு’ என்று சாடியுள்ளார். மேலும் இவரது பேச்சுக்காக முதல்வர் சித்தராமையா மன்னிப்புக் கேட்க வேண்டும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் மதுசூதன், “அமைச்சர் பெய்க் தனது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லையெனில் அவருக்கு என்ன மொழியில் பேசினால் புரியுமோ அதே மொழியில் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

முன்னாள் பிரதமரும் ஜேடிஎஸ் கட்சித் தலைவருமான தேவகவுடா, “ஒருவர் என்ன உணர்ச்சிநிலைகளுக்கு வேண்டுமானாலும் ஆட்படலாம், ஆனால் வரம்பு மீறக்கூடாது. பிரச்சினைகளைப் பற்றி மட்டும்தான் ஒருவர் பேச வேண்டும், அதுவும் தான் பயன்படுத்தும் மொழியைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x