Published : 13 Oct 2017 06:17 PM
Last Updated : 13 Oct 2017 06:17 PM

ரோஹிங்கியர்களை இப்போது திருப்பி அனுப்ப வேண்டாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வாய்மொழி அறிவுறுத்தல்

மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி இந்தியா வந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை தற்போது திருப்பி அனுப்ப வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து உத்தரவாக எதையும் பதிவு செய்ய வேண்டாம் ஏனெனில் அது ‘விரும்பத் தகாத பன்னாட்டு விளைவுகளை’ ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் ரோஹிங்கியர்கள் இது குறித்து அவசரத் தேவை ஏற்பட்டால் தங்களை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 22-ம் தேதி வரை தீபாவளி விடுமுறை வருவதால் விரிவான விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “எங்கு தவறு நடைபெறுகிறது என்று கருதப்படுகிறதோ நடவடிக்கை எடுங்கள், ஆனால் இப்போது அவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வாய்மொழியாகக் கூறினார்.

ரோஹிங்கியர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், “ஏதேனும் கஷ்டமேற்பட்டால் நாங்கள் இங்கு வருகிறோம்” என்றார்.

உச்ச நீதிமன்றம் இது குறித்து எந்த உத்தரவையும் குறிப்பிட துஷார் மேத்தா கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தார், ‘வழக்கு விசாரணையில் இருப்பதால்’ என்று கூட உச்ச நீதிமன்றம் குறிப்பிட துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

இது அசாதாரணமான ஒரு சூழ்நிலை, மிகப்பெரிய விவகாரம், இதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

தீபக் மிஸ்ரா, இந்திய அரசியல் சாசனம் குழந்தைகள், பெண்கள், உடல்நலம் குன்றியவர்கள், அப்பாவிகள் ஆகியோரை பாதுகாக்கிறது என்று கூறினார்.

அதாவது, “ஒன்றும் அறியாதவர்கள் அல்லது அப்பாவி என்று நாங்கள் எதைக் குறிப்பிடுகிறோம் என்றால், என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்கள் ரோஹிங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகள், ஒரு அரசமைப்பு நீதிமன்றமாக நாங்கள் இதனை மறந்து விட முடியாது, அரசும் மறக்கலாகாது” என்றார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

மனிதார்த்த அளவுகோல்களுடன் தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை அணுகும் முறை மத்திய அரசுக்குத் தேவை. “தேசியப் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு இரண்டாம்பட்ச இடம் கொடுக்க முடியாது, ஆனால் மனிதார்த்த அக்கறைகளுக்கும் இதற்கும் எப்படி நாம் சமநிலை கற்பிக்கப் போகிறோம்” என்றார் தீபக் மிஸ்ரா.

இதற்கு ஃபாலி நாரிமன், அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ் குடிமக்கள் மட்டுமல்ல எந்த ஒரு நபருக்கும் வாழ்வுக்கான உரிமை உள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் முக்கியம் என்றார்.

வழக்கு நவம்பர் 21-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x