Published : 13 Oct 2017 09:38 AM
Last Updated : 13 Oct 2017 09:38 AM

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஆளுநர்களும் புதிய பரிமாணம் கொடுக்கலாம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தகவல்

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஆளுநர்களும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மாநில ஆளுநர்களின் 2 நாள் மாநாடு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் கோவிந்த் தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் 27 மாநிலங்களின் ஆளுநர்கள், 3 துணைநிலை ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்கள் பாலமாக விளங்குகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதுடன் அதை அமல்படுத்த வேண்டியது ஆளுநர்களின் கடமை. வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஊழல், வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை விடுவித்து புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஆளுநர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மாநிலங்களின் சட்டப்பேரவை அமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும் ஆளுநர்களும், தங்களுடைய மாநில வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்க முடியும். அதாவது சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதுடன் அவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “புதிய இந்தியா இலக்கை அடைய இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அரசமைப்பு சட்ட தினத்துக்கும் (நவம்பர் 26) அம்பேத்கர் நினைவுதினத்துக்கும் (டிசம்பர் 6) இடைப்பட்ட காலத்தில், முத்ரா திட்டத்தின் கீழ் பழங்குடியினர், தலித் மற்றும் பெண்களுக்கு கடன் வழங்குமாறு வங்கிகளை ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆளுநர்கள் உரையாட வேண்டும். சமூக மாற்றத்துக்கான வினையூக்கியாக இருக்க வேண்டும்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x