Published : 13 Oct 2017 09:36 AM
Last Updated : 13 Oct 2017 09:36 AM

குர்மீத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் வன்முறையை தூண்டி விட்டதாக வளர்ப்பு மகள் ஹனிபிரீத் ஒப்புதல்: சிறப்பு விசாரணை குழு தகவல்

‘‘குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர், வன்முறையை தூண்டிவிட்டதாக ஹனிபிரீத் ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் சிர்சாவில் உள்ளது தேரா சச்சா சவுதா ஆசிரமம். இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளைப் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

அதன்பின், சிர்சா, பஞ்ச்குலா உட்பட பல பகுதிகளில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 35 பேர் பலியாயினர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு புலனாய்வு செய்து வருகிறது. வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகிகள் உள்ளதாக சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில், தலைமறைவான ஹனிபிரீத்தை கடந்த வாரம் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கூறியதாவது:

வன்முறையை தூண்டி விட்டதாக விசாரணையின் போது ஹனிபிரீத் ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல், குர்மீத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஹரியாணாவின் பல பகுதிகளில் கூடியிருந்த கும்பலில் பலருக்கு வீடியோ கிளிப்ஸ்கள் அனுப்பி வன்முறையில் ஈடுபட ஹனிபிரீத் தூண்டி விட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஹனிபிரீத்தின் கூட்டாளி குல்தீப்பும் வன்முறையை தூண்டியதாக ஒப்புக் கொண்டுள்ளார். வன்முறையில் ஈடுபட ரூ.1.25 கோடியை ஹனிபிரீத் விநியோகித்தார் என்று அவரது கார் டிரைவர் ராகேஷ் குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x