Published : 13 Oct 2017 09:32 AM
Last Updated : 13 Oct 2017 09:32 AM

2019 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எல்லா மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாளில் தலைவர்கள் வலியுறுத்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் சோஷலிச தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர்கள் நேற்று முன்தினம் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த (அதிருப்தி) தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “வரும் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது ஜெயபிரகாஷ் நாராயணுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு 1977-ல் நடந்த மக்களவை தேர்தலின்போது, ஜெயபிரகாஷ் நாராயண் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தார். இதனால் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது ஜனநாயகம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளானதோ அதைவிட மோசமான சூழல் இப்போது நிலவுகிறது. சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி ஆகிய அனைத்துக்கும் தற்போது அச்சுறுத்துல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது அனைத்து தரப்பினரும் கோபமாக உள்ளனர். எனவே, நாட்டு மக்களைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய இது சரியான தருணம். முழு ஒற்றுமை சாத்தியமில்லை என்றாலும் அதிகபட்ச ஒற்றுமைக்காக எதிர்க்கட்சிகள் பாடுபடவேண்டும்

இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என மாற்றுவதே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கம். 2019 தேர்தலில் வெற்றிபெற இந்தியாவை மத அடிப்படையில் துண்டாட அவர்கள் முயற்சி மேற்கொள்வார்கள்.

1977-ல் ஜனதா ஆட்சியின்போது சட்ட அமைச்சராக இருந்த சாந்தி பூஷண், “எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன என்ற ஒரே நம்பிக்கையில்தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என பாஜக நம்புகிறது” என கூறியதை நினைவு படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்ட நிலையில், ஐஜத தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் பாஜக வேட்பாளரை ஆதரித்தார். பின்னர் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x