Last Updated : 18 Jan, 2017 10:10 AM

 

Published : 18 Jan 2017 10:10 AM
Last Updated : 18 Jan 2017 10:10 AM

5 மாநில தேர்தலில் பாஜகவை குறிவைக்கும் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி போட்டியிடாத மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய திட்டம்

பாரதிய ஜனதாவை குறி வைத்து, தனது கட்சி போட்டியிடாத மாநிலங் களிலும் பிரச்சாரம் செய்ய அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவாவில் மட்டும் இவரது ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் பிராந்திய கட்சிகள் தங்கள் மாநிலங்களில் மட்டும் தீவிரமாகப் போட்டியிடும். மற்ற மாநிலங்களில் ஒருசில தொகுதிகளில் பெயருக்கு போட்டியிடுவது வழக்கமாக உள்ளது. பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் போட்டி யிடாத இடங்களில் பிரச்சாரம் செய்வதில்லை. இதற்கு மாறாக ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு உள்ளது. டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் முழுமூச்சுடன் போட்டியிடுகிறது. ஆனால் உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி ஓரிடத்தில்கூட போட்டி யிடவில்லை. எனினும் பிப்ரவரி 4-ல் பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் முடிந்தபின் மற்ற மூன்று மாநிலங்களிலும் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் தனது கட்சியின் மற்ற தலைவர்களையும் இங்கு பிரச் சாரம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாநிலங்களில் பாஜகவை தோற்கடிப்பதே கேஜ்ரிவாலின் முக்கிய நோக்கமாக உள்ளது. மணிப்பூரில் மட்டும் இரோம் ஷர்மிளாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கும் கேஜ்ரிவால், உ.பி., உத்தராகண்டில் எவரையும் ஆதரிக்க மாட்டார் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “உ.பி.யில் அதிக எண்ணிக்கை யிலான கூட்டங்களில் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக அவரது பிரச்சாரம் அமைந்திருக் கும். ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடிப்பதுடன், கோவா மற்றும் பஞ்சாபில் ஆட்சியை பிடிப்பது எங்கள் நோக்கம். 2019 மக்களவை தேர்தலுக்கு முன் 6 மாநிலங்களில் ஆட்சி அமைத்து தேசிய கட்சி அந்தஸ்து பெறுவது எங்கள் திட்டம்” என்று தெரிவித்தனர்.

லோக்பால் சட்டம் இயற்றக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவானது. இக்கட்சி கடந்த 2013-ல் முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது. இதில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. டெல்லியில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ல் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் இக்கட்சி நாடு முழுவதிலும் போட்டி யிட்டது. இதில், பஞ்சாபில் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. மேலும் கோவாவில் அதிக வாக்குகளை பெற்றது. எனவே இவ்விரு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இம்மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு முக்கியப் போட்டியாளராக ஆம் ஆத்மி உள்ளது. ஆம் ஆத்மி போட்டியிடாத மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக கேஜ்ரிவால் மேற்கொள்ளும் பிரச்சாரம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x