Published : 23 Jan 2015 01:24 PM
Last Updated : 23 Jan 2015 01:24 PM

விசாரணை கைதியை விடுவிக்க நடந்த சதியா?- பிஹார் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் பலி, 17 பேர் படுகாயம்

பிஹார் மாநிலம் அராவில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று குண்டு வெடித்ததில் ஒரு காவலர் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். கைதிகளைத் தப்பிக்க வைக்க நடந்த முயற்சியில் தவறுதலாக குண்டுவெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிஹார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள அராவில் உள்ள உரிமையியல் நீதிமன்ற வளாகத்துக்கு விசாரணைக் கைதிகள் நேற்று வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் நின்றிருந்த இடத்திலிருந்து நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறை அறைக்கு விசாரணைக் கைதிகள் ஒவ்வொருவராக அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது ஒரு பெண், வேனை நோக்கி வேகமாகச் சென்றார். திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், அப்பெண் உயிரிழந்தார். மேலும், அமித் குமார் என்ற காவலர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

முதலில் அப்பெண் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தி யிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் பட்டது. முதல்கட்ட விசாரணையில் அப்பெண் வெடிகுண்டுகளை ஒப்படைக்க வந்தவர் என்றும், எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே கூறியதாவது:

காலை 11.30 மணிக்கு குண்டு வெடித்தது. இதில் அமித் குமார் என்ற காவலர் மற்றும் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலில் வெடிபொருட்கள் பொதிந்துள்ளன. அப்பெண், லம்பா சர்மா என்ற கைதியிடம் குண்டுகளை ஒப்படைக்க வந்துள்ளார். வெடிகுண்டைப் பயன்படுத்தி தப்பிக்க லம்பா சர்மா திட்டமிட்டுள்ளார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். ரிமோட் மூலம் குண்டு வெடிக்கவைக் கப்படவில்லை. அப்பெண்ணின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், காவலர்கள் என 17 பேர் படுகாயமடைந்துள் ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளது. உயிரிழந்த பெண்ணின் அருகிலி ருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தெரிவித்தார்.

குண்டுவெடிப்பில் காயமடைந் தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

ஏற்கெனவே தப்பியவர்

லம்பா சர்மா, அகிலேஷ் உபாத்யாய் என்ற இரு கைதிகளைத் தப்ப வைக்கவே வெடிகுண்டுகளை ஒப்படைக்க அப்பெண் வந்ததாகத் தெரிகிறது. லம்பா சர்மா இதே உத்தியைப் பின்பற்றி கடந்த 2009-ம் ஆண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அரா நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பித்துள்ளார். பின்னர் மீண்டும் லம்பா சர்மா கைது செய்யப்பட்டார்.

ஆனால், இம்முறை அந்த உத்தி பலனளிக்கவில்லை.

தப்ப வைக்கும் முயற்சி

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அரா தொகுதி எம்.பி.யான ஆர்.கே. சிங், “சில சிறைக்கைதிகளைத் தப்ப வைக்கும் முயற்சிதான் குண்டு வெடிப்பு. போலீஸ் விசாரணை யில் எல்லா உண்மைகளும் தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x