Last Updated : 06 Jan, 2015 05:07 PM

 

Published : 06 Jan 2015 05:07 PM
Last Updated : 06 Jan 2015 05:07 PM

வறுமை பற்றிய அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை: தேசிய புள்ளிவிவரங்கள் ஆணையர் பிரனாப் சென்

நாட்டில் தற்போது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய அதிகாரபூர்வ புள்ளிவிவர எண்ணிக்கைகள் அரசிடம் இல்லை என்று தேசிய புள்ளி விவரங்கள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பிரனாப் சென் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதன் முக்கிய அம்சங்கள்:

உலக வங்கியின் பன்னாட்டு வளர்ச்சிக் கூட்டமைப்பு நிதியை இந்தியா பெறுவதற்கு வறுமைக் குறைப்பு திட்டங்கள் பற்றிய தெளிவான விவரங்களை இந்தியா வைத்திருப்பது அவசியம். 12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை இந்தியா சமாளிக்கும். ஆனால் 2017-ஆம் ஆண்டு முதல் உலக வங்கி அளிக்கும் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியா பெற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான தெளிவான வரையறைகள் தேவை. எனவே இதில் கவனம் செலுத்துவது அவசியம்.

திட்டக் கமிஷன் இல்லாததன் அனுகூலமின்மைகள்:

நம் நாட்டின் நிதியமைச்சகம் நிதி மற்றும் பற்றாக்குறைகள் பற்றியே அச்சப்படுகிறது, வளர்ச்சி பற்றியல்ல. நிதியை எப்படி தினசரி அடிப்படையில் நிர்வாகம் செய்வது என்பதே அதன் கவலையாக இருப்பதால், நீண்ட காலத் திட்டங்களை அதனால் தொலை நோக்குப் பார்வையுடன் அணுக முடிவதில்லை.

திட்டக் கமிஷன் என்பது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது. உதாரணமாக அமைச்சகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் திட்டகமிஷன் தலையிட்டு சுமுக தீர்வுகளை எட்ட முடியும். திட்டகமிஷன் ஒதுக்கீடுகள் எதையும் செய்யாது, ஆனால் நடைமுறைகளை சரிபார்ப்பது அதன் முக்கியமான பங்காகும். அது ஒரு சுதந்திரமான குரல், அமைச்சகம் ஒரு முடிவை எடுத்தால் அதனை திட்டகமிஷன் மறுதலிக்க முடியும். திட்டக் கமிஷன் இல்லாததால் சுதந்திரமான குரலை இழந்துள்ளோம்.

வறுமை பற்றிய அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின்மை குறித்து...

இந்தியாவின் வறுமை பற்றிய புள்ளிவிவரங்கள் வழக்கொழிந்த ஒன்று. 9-வது ஐந்தாண்டு திட்டத்தில்தான் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பு செய்யப்பட்டது. நாம் தற்போது 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இருக்கிறோம். பல மாநிலங்கள் இதனால் வெறுப்படைந்துள்ளன. வறுமை பற்றிய விவரங்கள் இல்லாமல் நிதி ஒதுக்கீடு எப்படி செய்ய முடியும்?

புள்ளிவிவரங்களை தாங்களே செய்ய முடியக்கூடிய மாநிலங்கள் தங்களுக்கான கணக்கெடுப்பை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் உத்தரப்பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்தகைய வசதிகள் இல்லை. வறுமை குறித்த தெண்டுல்கர் அறிக்கையை நிறுத்தி வைத்திருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மாற்று என்பதே இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணை அரசு வறுமை குறித்து ரங்கராஜன் கமிட்டியை நியமித்தது. இந்த கமிஷன் பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் திட்டக்கமிஷன் இல்லாமல் யார் அதனை ஆய்வு செய்வார்கள்?

வறுமை பற்றிய புள்ளிவிவரங்கள் இன்மை ஏழைகளை எப்படி பாதிக்கும்?

இந்தியாவின் தற்போதைய வறுமை நிலவரம் பற்றி கேட்டால் நமக்கு ஒன்றுமே கிடைக்காது, காரணம் அதிகாரபூர்வ விவரங்கள் இல்லை. நான் அதனைப் பற்றி ஒன்றும் கூற முடியாத நிலையில் உள்ளேன். வறுமை ஒழிப்புத் திட்டங்களை இந்நடைமுறைகள் கேலிக்கூத்தாக்குகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் தொகை பற்றிய விவரங்களுடன் நிறைய விஷயங்கள் தொடர்புடையது. அரசுடைய எந்த ஒரு திட்டமும் இதனுடன் தொடர்புடையதே. மத்திய அரசு என்பது இதில் வெறும் நிதி ஒதுக்கீட்டு எந்திரமே, மாநில அரசுகள்தான் அதனை வினியோகிப்பது பற்றிய முறைகளை வகுத்தெடுக்கும்.

இவ்வாறு பிரனாப் சென் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x