Last Updated : 06 Oct, 2016 08:35 PM

 

Published : 06 Oct 2016 08:35 PM
Last Updated : 06 Oct 2016 08:35 PM

ரோஹித் வெமுலா தலித் இனத்தைச் சார்ந்தவர் என்பது நிறுவப்படவில்லை: விசாரணை ஆணையம்

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா தற்கொலைக்கு சொந்த பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தலித் இனத்தைச் சேர்ந்தவரா என்பதும் சந்தேகமாக உள்ளது என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோருக்கு எதிராகவோ, பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிராகவோ எவ்வித குற்றச்சாட்டும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை எனத் தெரிகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் என்ற காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அலைக்கழித்ததும், பின்னர் இடைநீக்கம் செய்ததுமே ரோஹித் தற்கொலைக்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியும், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும்தான் தற்கொலையை தூண்டியதாகவும் இவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி ரூபன்வால் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோஹித் தலித் இனத்தைச் சேர்ந்தவர்தானா என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. ஏனெனில் அவரது பெயரில் தலித் என சாதிச் சான்றிதழ் இருந்தாலும், அவரது தாய் வி.ராதிகா தலித் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே, சலுகைகளை பெறுவதற்காக ரோஹித்துக்கு தலித் என சான்றிதழ் வாங்கியிருக்கலாம் என ஆணையம் கருதுகிறது.

மேலும் ரோஹித் வெமுலா சொந்த பிரச்சினையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஆணையம் கருதுகிறது. எனவே, விரக்தியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மாணவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை செய்வதன் மூலம் வரும் காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x