Last Updated : 06 Oct, 2016 05:13 PM

 

Published : 06 Oct 2016 05:13 PM
Last Updated : 06 Oct 2016 05:13 PM

ராணுவ துல்லியத் தாக்குதலை முன்வைத்து உ.பி.யில் பாஜக புது பிரச்சார வியூகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலை முன்வைத்து, உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிரப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சுவரோட்டிகளை அச்சடித்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒட்டும் பணிகளில் உள்ளூர் பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இதற்கான பிரச்சாரத்தை நால்வருமே துவங்கி தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இதில், கடந்த 29 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மிரின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை கையில் எடுத்த பாஜக, அதை அரசியல் பிரச்சார சுவரொட்டியாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்தச் சுவரொட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, லக்னோ, மீரட், முசாபர்நகர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றில், இந்திய ராணுவத்தின் தாக்குதலை பிரதமர் நரேந்தர மோடியின் சாதனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பதான்கோட் மற்றும் உரி செக்டர் தாக்குதல்களுக்கான சரியான பதிலடியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தசரா பண்டிகையை ஒட்டிய சில சுவரோட்டிகளில், மோடியை ராமராகவும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ராவணனாகவும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்திரஜித்தாகவும் சித்தரித்துள்ளனர். ராமாயணத்தில் சொல்லப்படும் ராவணன் மகன் இந்திரஜித் ஆவார். இவரது பெயரில் கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட, அவர் பாகிஸ்தான் தாக்குதலின் வீடியோ ஆதாரம் கேட்டது காரணமாகக் கருதப்படுகிறது.

இன்னும் சில இடங்களில், தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதலை பாராட்டி பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கும் பெரிய அளவிலான பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் நேரடியாக பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கேட்கப்படவில்லை. எனினும், முசாபர்நகரில் வைக்கப்பட்ட பேனர்களில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கேஷவ் பிரசாத் மவுரியா, மதக்கலவர வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.பி. சஞ்சீவ் பலியான் மற்றும் பாஜக எம்.எல்.ஏ கபில் தேவ் அகர்வால் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால், இந்தச் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மீதான கடுமையான விமர்சனங்கள் பொதுமக்களும், நெட்டிசன்களும் முகநூல் பக்கங்களில் இடம்பெறத் துவங்கிவிட்டன. இதில், 'தேசபக்தி சுவரொட்டிகள் மீது பாஜக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்?' எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதை அடுத்து முசாபர்நகரில் மட்டும் ஒன்பது பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x