Last Updated : 01 Aug, 2015 02:15 PM

 

Published : 01 Aug 2015 02:15 PM
Last Updated : 01 Aug 2015 02:15 PM

யாகூப் மனைவிக்கு எம்.பி. பதவி: சமாஜ்வாதி மூத்த தலைவர் கோரிக்கையால் சர்ச்சை

‘‘தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் மனைவியை மாநிலங்களவை எம்.பி.யாக்க வேண்டும்’’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை அக்கட்சியின் மகாராஷ்டிர துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 30-ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு, அக்கட்சியின் மகாராஷ்டிர துணைத் தலைவர் முகமது பரூக் கோஷி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

யாகூப் மேமனின் மனைவி ரஹீன் தற்போது ஆதரவற்று இருக்கிறார். அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஹீன் பல ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். ஒரு பெண்ணாக அவர் எவ்வளவுதான் கஷ்டப்படுவார். ரஹீன் போன்ற பல முஸ்லிம்கள் நாட்டில் ஆதரவற்று இருக்கின்றனர். அவர்களுக்காக குரல் கொடுக்க ரஹீனை எம்.பி.யாக்க வேண்டும்.

இவ்வாறு முகமது பரூக் கோஷி கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர தலைவர் அபு அசிம் ஆஸ்மி கூறும்போது, “கட்சியின் மாநிலத் தலைமைக்கு தெரிவிக்காமல், கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் முலாயமுக்கு முகமது பரூக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முகமது பரூக்கின் கடிதம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறும்போது, “யாகூப் மேமனை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அரசியலாக்க கூடாது. முகமது பரூக்கின் கருத்து அவர்களுடைய கட்சி சம்பந்தப்பட்டது. ஆனால், யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை மதப் பிரச்சினையாக்க அவர்கள் முயற்சிப்பது தெரிகிறது” என்றார்.

பாஜக தலைவர் மாதவ் பண்டாரி கூறும்போது, “ஒரு கட்சியை சேர்ந்தவர், ஏதாவது ஒரு விஷயத்தை கட்சித் தலைமையிடம் சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால், கட்சித் தலைவராக இருப்பவர்கள் யோசனை தெரிவிக்கும்முன் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டு வங்கிக்காக சமாஜ்வாதி கட்சி முயற்சிக்கிறது என்பது முகமது பரூக்கின் கருத்து நிரூபிக்கிறது. அவருடைய கருத்து குறித்து சமாஜ்வாதியின் நிலையை முலாயம் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.

முகமது பரூக் கோஷி இடைநீக்கம்

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர துணைத் தலைவர் முகமது பரூக் கோஷி, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

யாகூப் மேமன் மனைவி ரஹீனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என்று முகமது பரூக் கூறியதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் பொறுப்பில்லாமல் யோசனை தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக சமாஜ்வாதி கட்சி மேலிடம் நேற்று அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x