Last Updated : 30 Dec, 2016 10:00 AM

 

Published : 30 Dec 2016 10:00 AM
Last Updated : 30 Dec 2016 10:00 AM

மோடிக்கு எதிராக ஆதாரமின்றி குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தால் சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என, காங்கிரஸ் கட்சியை பாஜக எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சரு மான ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, ‘காங்கிரஸ் தலைவர்களும், செய்தித் தொடர்பாளர்களும் குழந்தைகளைப் போல நடந்து கொள்கின்றனர். இப்போதிருக்கும் காங்கிரஸ் கட்சி, 132 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள கட்சியாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர்கள் வெளியிடும் குழந்தைத்தனமான கருத்து, பேச்சு போன்றவை சோனியா காந்திக்கு தெரிந்துதான் வெளியிடப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

ரூ.13,860 கோடி கணக்கில் வராத பணம் வைத்திருந்தது தொடர்பாக மகேஷ் சர்மா என்பவரிடம் சட்டப்படி விசாரணை நடக்கிறது. அவருடன் பிரதமர் நரேந்திர மோடிக்கும், கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. குஜராத் வங்கி ஒன்றில் அமித் ஷா ரூ.500 கோடி டெபாசிட் செய்ததாகக் கூறுவதும் தவறு.

ஆதாரம் இருந்தால் மட்டுமே காங்கிரஸ் பேச வேண்டும். இல்லையென்றால், பொய் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படுவதைச் சமாளிப்பதற்கு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனைச் செய்வது குறித்து பரிசீலிப்போம்.

இதுபோன்ற தாக்குதல்களால், கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தடைபடும் என காங்கிரஸ் நினைத்தால் அது தவறாகிவிடும். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், கறுப்புப் பணத்துக்கு எதிரான போரில் பின்வாங்க மாட்டோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x