Last Updated : 18 Jan, 2017 10:28 AM

 

Published : 18 Jan 2017 10:28 AM
Last Updated : 18 Jan 2017 10:28 AM

மேற்குவங்க மாணவிகள் இருவர் உட்பட 25 சிறாருக்கு தேசிய வீரதீர விருது: 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 25 சிறார்களுக்கு தேசிய வீரதீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

வீரதீர சாகசங்கள் புரியும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக மொத்தம் 25 குழந்தைகளுக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 4 விருதுகள் உயிரிழந்த பின் வழங்கப்படவுள்ளன.

இதில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகளான தேஜஸ்வீதா பிரதான் (18) மற்றும் ஷிவானி காண்ட் (17) இருவருக்கும் கவுரவமிக்க கீதா சோப்ரா விருது வழங்கப்படவுள்ளது.

தன்னார்வ தொண்டு அமைப்பின் தொண்டர்களான தேஜஸ்வீதாவும், ஷிவானியும் சமூக வலைதளம் மூலம் தோழிகளாகினர். குறிப்பாக நேபாளத்தில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே நெருக்கமான தோழமை ஏற்பட்டது.

இதுகுறித்து தேஜஸ்வீதா கூறும்போது, ‘‘நான் 8-ம் வகுப்பு படிக்கும் முதலே ஆள்கடத்தலுக்கு எதிரான மார்க் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நேபாளத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் உதவும்படி எனது அமைப்பிடம் இருந்து கோரிக்கை வந்தது. முதலில் இந்தப் பணியில் இறங்க எனது பெற்றோரும், நானும் தயங்கினோம். பின்னர் இது மிகப் பெரிய அளவில் நன்மை பயக்கும் என்பதை புரிந்து கொண்டதும் துணிந்து களத்தில் இறங்கினோம்’’ என்றார்.

கடத்தல்காரர்களைப் பிடிக்க தீட்டிய திட்டம் குறித்து ஷிவானி கூறும்போது, ‘‘நேபாளத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்க திட்டப்படி பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி னோம். அதில் நேபாள சிறுமிகளாக எங்களை அடையாளப்படுத்தி வேலைவாய்ப்பு கேட்டு பதிவுகள் வெளியிட்டோம். அதைக் கண்டு எங்களைத் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு ஹோட்ட லுக்கு வரும்படி அழைத்தது.

இதைத் தொடர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அங்கு சென்று அந்த கும்பலை பிடித்தோம். இதில் போலீஸாரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இதன் மூலம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவனும் கடந்த ஆண்டு டெல்லியில் பிடிபட்டான்’’ என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் பச்சின் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிருக்காக போராடிய இரு நண்பர்களை பீஜு என்ற 8 வயது சிறுமி காப்பாற்றினாள். எனினும் இந்தப் போராட்டத்தில் பீஜு உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு வீரதீர செயல் புரிந்தமைக்கான பாரத விருது வழங்கப்படவுள்ளது.

இதேபோல சிறுத்தையிடம் இருந்து தனது உறவினரைக் காப்பாற்றிய உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் மம்கெயினுக்கு (18) சஞ்சய் சோப்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் தேர்வு செய் யப்பட்ட 25 பேருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய வீரதீர விருது வழங்கி கவுரவிப்பார். பின்னர் 26-ம் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் அவர்கள் பங்கேற்பர். விருதுக்கு தேர்வானவர்களில் 12 பேர் சிறுமிகள், 13 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x