Published : 23 May 2015 08:28 AM
Last Updated : 23 May 2015 08:28 AM

மின்விளக்கு அலங்காரம் சரியில்லை என்று மண்டபத்தில் மணமகன் தகராறு செய்ததால் திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்

திருமண மண்டபத்தில் சின்ன விஷயம், காரசார விவாதமாகி, கைகலப்பில் முடிந்தது. போலீஸ் வந்து சமரசம் செய்து முடிக்கும்போது, தகராறு செய்த மணமகனை திருமணம் செய்ய முடியாது என்று மணமகள் துணிச்சலாக மறுத்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், எடாவா மாவட்டம் பத்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்டது கெதா அஜாப் சிங் கிராமம். இங்கு மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விஜய் சிங் என்ற இளைஞருக்கும் நாது சிங் என்பவரின் மகள் சந்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த புதன்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இரு வீட்டாரும் அன்றைய தினம் இரவு மகிழ்ச்சியில் கூடியிருந்தனர்.

அப்போது, ‘மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் இடத்தில் மின் விளக்கு அலங்காரம் சரியில்லை. எனவே, அங்கு மின் விளக்குகளை கூடுதலாக பொருத்தி, அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று மணமகன் விஜய் தரப்பினர் கூறினர். இதை மணப்பெண் வீட்டார் ஏற்கவில்லை. இந்தச் சின்ன பிரச்சினை தொடர்பாக இரு வீட்டாரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச காரசார விவாதமாகி விட்டது.

அப்போது சந்தாவின் தந்தை நாது சிங் - மணமகன் விஜய் இருவரும் தரக்குறைவாக பேசியுள்ளனர். சண்டை பெரிதானதும் கடைசியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மண்டபத்துக்கு விரைந்து வந்த போலீஸார், இரு தரப்பினரையும் விலக்கி சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து சந்தாவின் உறவினர் அஜய் என்பவர் கூறுகையில், ‘‘தேவையில்லாமல் விளக்கு அலங்காரம் சரியில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மணப்பெண் வீட்டாரிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். மணப்பெண்ணின் தந்தையும் சகோதரனும் அவர்களை சமாதானப்படுத்த சென்ற போது, அவர்களை மிரட்டி உள்ளனர். சின்ன விஷயத்துக்கு எல்லாம் குறை கண்டுபிடிக்கும் இதுபோன்ற பையனுக்கு எங்கள் சகோதரியை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம்’’ என்றார்.

அதற்கேற்ப விஜய்யைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சந்தாவும் பிடிவாதமாகக் கூறிவிட்டார். கடைசியில் திருமணம் நின்று போனது. மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து ம.பி.க்கு திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பத்புரா போலீஸார் கூறுகையில், ‘‘மின் விளக்கு அலங்காரம் சரியில்லை என்பதற்காக திருமணம் நின்று போனதை இப்போதுதான் பார்க்கிறோம். இதுதொடர்பாக பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. திருமணத்துக்காக கொடுக்கப்பட்ட பணம், பரிசு பொருட்களை மணமகன் வீட்டார் திருப்பி கொடுத்துவிட்டனர். திருமண வீட்டில் நடந்த தகராறு தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x