Last Updated : 31 May, 2016 09:36 AM

 

Published : 31 May 2016 09:36 AM
Last Updated : 31 May 2016 09:36 AM

மாநிலங்களவைத் தேர்தல்: கர்நாடகாவில் மஜத.வின் இடத்தை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி திட்டம்

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களில், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் தேவகவுடா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக நிறுத்தியுள்ள வேட்பாளரின் வெற்றி கேள்விக் குறியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆயனூர் மஞ்சுநாத் (பாஜக), வெங்கய்ய நாயுடு (பாஜக), ஆஸ்கர்பெர்னாண்டஸ் (காங்கிரஸ்), விஜய்மல்லையா (சுயேச்சை) ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி விஜய்மல்லையா தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 4 இடங்களுக்கும் வரும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைவதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சியினரையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 உறுப்பினர் களில் 124 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 44 பேரும், தேவகவுடாவின் மஜதவுக்கு 40 பேரும், மற்ற கட்சிகளுக்கு 16 பேரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 45 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இத‌னடிப்படையில் காங்கிரஸ் 2 இடங்களிலும், பாஜக, மஜத ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் 4 இடங்களில் 3 இடங்களைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மஜதவில் உள்ள 5 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் இதர கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, மூன்றாவது இடத்தையும் கைப்பற்ற சித்தராமையா வியூகம் அமைத்துள்ளார். இது தொடர்பாக அந்த எம்.எல்.ஏக்களுடன் சித்தராமையாவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க மஜத அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மற்ற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்த இரு வேட்பாளர்களுடன், மூன்றாவதாக காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் ஒருவரை சித்தராமையா களமிறக்கியுள்ளார். எனவே காங்கிரஸின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.சி.ராமமூர்த்தி ஆகியோர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதே போல பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இறுதிநாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் தேவகவுடா மஜத சார்பாக ஃபரூக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக 3-வது வேட்பாளர் அறிவித்துள்ள தால் மஜதவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது. காங்கிரஸ் தன்னிடம் உள்ள 124 உறுப்பினர்களில் 2 இடங்களை கைப்பற்ற 90 எம்எல்ஏக்களின் வாக்குகளை பயன்படுத்தும். இது போக தன்னிடம் மீதமிருக்கும் 34 எம்எல்ஏக்களுடன், மஜதவின் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து மூன்றாவது இடத்தையும் கைப்பற்றும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸூக்கும், மஜதவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x