Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

மன்மோகன்- டேவிட் கேமரூன் சந்திப்பு

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்பட இருதலைவர்களும் உறுதி பூண்டனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பங்கேற்கிறார். அந்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் புதன்கிழமை இரவு அவர் டெல்லி வந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை வியாழக்கிழமை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வர்த்தகம், பொருளாதாரம், விசா நடைமுறைகள் மற்றும் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் டேவிட் கேமரூன் கூறியது:

கடந்த காலத்தில் இருந்தே இந்தியாவுடன் பிரிட்டனுக்கு உறவு இருக்கிறது. மொழி, கலாசாரரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே பிணைப்பு உள்ளது. இருநாட்டு வர்த்தக உறவும் வலுவடைந்து வருகிறது. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன.

இவை எல்லாவற்றையும்விட உலகின் மிக பழமையான இரு ஜனநாயக நாடுகளும் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதை நினைத்து இப்போதே பூரிப்பு அடைகிறேன்.

குடியேற்றப் பிரச்சினை

பூகோளரீதியில் இந்தியாவைவிட பிரிட்டன் சிறிய நாடு. எனவே குடியேற்ற விவகாரத்தில் பிரிட்டன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. பிரிட்டனில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் அங்கேயே பணியாற்றவும் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்றார்.

பிரிட்டன் பிரதமராக டேவிட் கேமரூன் பொறுப்பேற்ற பின்னர் 3-வது முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x