Last Updated : 07 Dec, 2016 10:46 AM

 

Published : 07 Dec 2016 10:46 AM
Last Updated : 07 Dec 2016 10:46 AM

போட்டி நிறைந்த அரசியலில் தமிழகத்தில் மிகப்பெரிய தலைவரானவர்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நெகிழ்ச்சி

போட்டி நிறைந்த தமிழக அரசி யலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்தவர் ஜெயலலிதா என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வரின் நெருங் கிய நண்பரான ரவிசங்கர் பிரசாத், அவர் குறித்து பல்வேறு நினைவுகளை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:

ஜெயலலிதாஜியின் அரசியல் வளர்ச்சியை நான் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். போட்டி நிறைந்த தமிழக அரசிய லில் மிகப்பெரிய தலைவராக உரு வெடுத்தவர் அவர் என எனக்குப் புரிந்தது. அவர் ஆங்கிலத்தில் கம் பீரமான குரலில் மிகத்தெளிவாகப் பேசுவதை பார்த்திருக்கிறேன். வாஜ்பாய்ஜி தலைமையிலான அரசில் நான் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயாஜி பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அக் காலகட்டத்தில் நாங்கள் தொலைக் காட்சிகளுக்கான உரிமைகள் குறித்த விஷயத்தில் பலமுறை ஆரோக்கியமான விவாதம் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டிருந் தோம். இதில், பலமுறை நாங்கள் கருத்து ரீதியாக வேறுபட்டுள் ளோம். இதுபோன்ற சந்திப்புகள் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பை வளர்த்தது.

2003-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி தொடக்க விழா நடை பெற்றது. அதில் ஜெயாஜி உடன் அப்போதைய துணை பிரதமர் அத்வானிஜியும் கலந்துகொண் டார். இதில் வரவேற்புரை அளித்து முடித்த என்னிடம், “நீங்கள் நன் றாகப் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி” என்று ஜெயாஜி கூறினார்.

2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பாஜக அதிமுக இடையே கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்தது. இதற்காக சென்னை சென்ற எனக்கும் அத் வானிஜிக்கும் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயாஜி விருந்து வைத்தார். அப்போது அவர் என்னிடம் “நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?” எனக் கேட்டார். இதற்கு அருகிலிருந்த அத்வானிஜி, பிஹார் என்றார். இதற்கு ஜெயாஜி, “ஓ, நீங்கள் லாலுவின் பிரதேசத்தில் இருந்து வருகிறீர் களா? ஆனாலும் உங்கள் ஆங்கிலம் நன்றாக உள்ளது” என்று கூறியதை கேட்டு நாங்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தோம்.

தொடர்ந்து அவர் டெல்லி வந்தாலும் சரி, நான் சென்னைக்கு சென்றாலும் சரி எங்களுக்குள்ள நேரத்தை பொறுத்து தவறாமல் சந்தித்து வந்தோம். அடுத்து நான் தமிழக பாஜகவின் பொறுப்பாள ராக இருந்தபோது, எங்கள் சந்திப் புகள் அதிகமாயின. துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பங்கேற்க, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிஜி சென்னை வந்திருந்தார். அப்போது மோடிஜிக்கு போயஸ் தோட்டத்தில் அளிக்கப்பட்ட சிறப்பு விருந்தில் நானும் கலந்து கொண்டேன். இதில், 48 வகையான தமிழக உணவுகள் பரிமாறப்பட்டன. இது மோடிஜி - ஜெயாஜி இடையே மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப் பாக இருந்தது. அப்போது, நான் அவரிடம், “உங்கள் வீட்டு வாசலில் பத்திரிக்கையாளர்கள் காத்திருக் கிறார்களே? அவர்களிடம் நாங்கள் என்ன சொல்வது?” எனக் கேட்டோம். இதற்கு ஜெயாஜி, “48 வகையான தமிழக உணவு விருந் தில் பரிமாறப்பட்டதே பெரிய செய்தி தான்!” என்று கூறி சிரித்தார்.

ஜெயாஜி மீது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த தலா இரு வழக்குகளுக்கு நான் வாதிட்டேன். அதற்காக ஜெயாஜி என்னை பார்க்கும்போது வழக்குக்கான பல யோசனைகளை தெரிவித்தார். இதைக்கேட்டு வியந்த நான் அவரிடம் “நீங்கள் எப்போதாவது சட்டத்துறையில் பணியாற்ற விரும்பியது உண்டா?” எனக் கேட்டேன். இதற்கு அவர், “நான் வழக்கறிஞர் ஆகவே விரும்பினேன். ஆனால் எனது குடும்பச் சூழல் என்னை நடிகை ஆக்கிவிட்டது” என்றார்.

தற்போது மோடிஜியின் ஆட்சியில் நான் அமைச்சரான பின் தமிழகத்திற்கு ஐடி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கச் சென்றிருந்தேன். அந்த சந்திப்பில் ஜெயாஜி எனக்கு அளித்த வரவேற்பை கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். எந்த விஷயத்தையும் அவர் தெளிவாகவும் விரிவாகவும் புரிந்து வைத்திருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.

தமிழக போலீஸாருக்கு மழை கோட் அளித்ததன் பின்னணியை ஒருமுறை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். கடும் மழை பெய்துகொண்டிருந்தபோது அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந் தார். அப்போது பெண் போலீஸார் மழையில் நனைந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்ததை கண்டு கவலை அடைந்த அவர், உடனடியாக தமிழக போலீஸா ருக்கு இலவசமாக மழை கோட் அளிக்க உத்தரவிட்டுள்ளார். ஏழை களுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் திட்டம், அசாதாரண திட்டம் ஆகும்.

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பதவி யேற்கும் விழாவில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் மிகவும் வருத்தப்பட் டுள்ளார். இதை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த நான், அவருக்கு போன் செய்து பேசினேன். அடுத்து துணை குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவாத் பதவி ஏற்றபோது ஜெயாஜிக்கு மறக்காமல் குறித்த நேரத்தில் முறையாக அழைப்பு விடுத்தேன். இதில் அவர் கலந்துகொண்டது விழாவில் முக்கிய கவனம் பெற்றதை மறக்க முடியாது.

அவரது திடீர் மறைவு என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி கொள்ளட்டும்! புரட்சித் தலைவிக்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x