Last Updated : 20 Sep, 2015 11:21 AM

 

Published : 20 Sep 2015 11:21 AM
Last Updated : 20 Sep 2015 11:21 AM

பிஹார் தேர்தலில் பாஜகவுக்கு தர்மசங்கடம்: பாஸ்வான், மாஞ்சியின் பட்டியலில் 6 வாரிசுகள்

பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோர் வெளியிட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 6 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர். இது வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜகவுக்கு தர்மசங்கத்தை அளித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக, குடும்ப அரசியலை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில் பிஹாரில் பாஜக கூட்டணியில் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட லோக் ஜனசக்தி (பாஸ்வான் கட்சி) தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 வேட்பாளர்கள் கொண்ட அந்தப் பட்டியலில் 4 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர்.

பாஸ்வானின் தம்பி பசுபதி குமார் பாரஸ், அண்ணன் மகன் பிரின்ஸ் ராஜ், மருமகள் சரிதா என பாஸ்வான் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹபூல் அலி கெய்சரின் மகன் சலாவுத்தீன் யூசுப்பும் அந்தப் பட்டியலில் உள்ளனர்.

இதேபோல், ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 2 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர். மாஞ்சியின் மகன் சந்தோஷ்குமார் சுமன், அவரது கட்சியின் பிஹார் மாநிலத் தலைவர் சகுனி சவுத்ரியின் மகன் ரோஹித் குமார் ஆகியோரின் பெயர்கள் அப்பட்டியலில் உள்ளன.

பாஸ்வான், மாஞ்சி ஆகியோர் தங்கள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 6 வாரிசுகள் இருப்பது பாஜகவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தக் கட்சிகளில் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து லோக் ஜனசக்தி கட்சியின் மக்களவை உறுப்பினர் ராமன் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “எங்கள் கட்சி ஒரே குடும்பத்துக்கு சொந்தமான கட்சியாகி விட்டது. கடந்த 6 மாதங்களாக வேட்பாளர்களுக்கான மனுக்களை பெற்ற பாஸ்வான், மூத்த தலைவர்களான எங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை. எங்கள் கட்சியை ‘தந்தை-மகன் கட்சி’ என்று ஜிதன் ராம் மாஞ்சி சில நாட்களுக்கு முன் விமர்சித்தார். ஆனால் அவரும் தனது மகன் பெயரை அறிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என்றார்.

லோக் ஜனசக்தி கட்சியின் மற்றொரு தலைவரான சஞ்சீவ் சர்தார், பிஹாரின் ஜெஹ்னாபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது தாய் அல்லது தந்தை எம்.பி.யாக இருந்திருந்தால் எனக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும்” என்கிறார்.

பாஜக கூட்டணியில், மத்திய இணை அமைச்சர் உபேந்தர் குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய சமதா கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கட்சி சார்பில் வெளியாகவிருக்கும் முதல் பட்டியலிலும் அவரது சகோதரர் உட்பட வாரிசுகள் சிலரின் பெயர் இடம்பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இளைய மகன் தேஜஸ்வீ யாதவ் ஆகியோர் முதன் முறையாக இத் தேர்தலில் போட்டியிட ஏற்கெனவே முடிவாகி உள்ளது. இவர்களுடன் லாலுவின் மகள் மிசா பாரதியும் இத்தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு, அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x