Published : 08 Nov 2016 08:28 AM
Last Updated : 08 Nov 2016 08:28 AM

பிறந்த 7 நாளில் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையை காப்பாற்றிய நாய்கள்: மே.வங்கத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

நாய்கள் தாங்கள் நன்றியும், விசுவாசமும் உள்ள செல்லப் பிராணிகள்தான் என்பதை மனிதர்களிடம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, மனிதாபிமானம் மனிதர்களை விட, நாய்களிடத்தில் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியா நகரின் பதார்டி பாரா பகுதியில் உல்லாஸ் சவுத்ரி என்ற பள்ளி ஆசிரியர் வசித்து வருகிறார். அண்மையில் அவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிக்கிடந்த ஒரு பகுதியிலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. புதர்களை விலக்கி உள்ளே பார்த்தபோது, 4 தெரு நாய்கள் எதையோ நடுவில் வைத்து, அதனைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.

என்னவென்று புரியாமல் சந்தேகத்துடன் சவுத்ரி அருகில் சென்றார். சவுத்ரி வருவதைக் கண்டதும், நாய்கள் உற்சாகமாகி வாலை ஆட்டத் தொடங்கிவிட்டன. சன்னமாக குரைத்து, தரையில் மண்டியிட்டு ஏதோ சொல்ல முயன்றன.

அருகில் சென்ற சவுத்ரிக்கு பெரும் அதிர்ச்சி. வெளிர் சிவப்பு நிறத் துணியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அப்பிஞ்சுக் குழந்தையை காக்கைக் கூட்டம் கொத்தி விடாமல், நாய்கள் துரத்திக் கொண்டு, பாதுகாத்து வந்துள்ளன.

உடனடியாக சத்தம் போட்டு, அருகில் இருந்தவர்களை அழைத்தார் சவுத்ரி. அனைவரும் சேர்ந்து குழந்தையை சவுத்ரியின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அழுது முகமெல்லாம் சிவந்துப்போயிருந்த குழந்தைக்கு, சவுத்ரியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் பர்வீன் சென் என்ற பெண் பாலூட்டியுள்ளார். அதன் பிறகு குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது.

பின்னர் புருலியா சதர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உதவி எண்ணுக்கும் காவல்துறையினர் மூலம் தகவல் சென்றது. குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த காவல் துறையினர், அதனை தெபென் மஹதோ சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். குழந்தையின் எடை 2.8 கிலோ இருந்தது. பிறந்து 7 முதல் 10 நாட்களாகியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்படும் அக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டாலும், பயப்பட ஒன்றுமில்லை என, மருத்துவர் சிவ்சங்கர் மஹதோ கூறினார்.

சனிக்கிழமை நாளில் மீட்கப் பட்டதால், அக்குழந்தைக்கு சனிவார் என, சவுத்ரி பெயர் சூட்டினார். சிகிச்சைகள் முடிந்த பிறகு, பாத்பந்தில் உள்ள அரசு குழந்தைகள் காப் பகத்தில் சனிவார் சேர்க்கப்படுவாள் என மாவட்ட ஆட்சியர் திபன்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதரில் இருந்து குழந்தையை மீட்டுச் சென்றபோது, மக்களோடு சேர்ந்து, 4 நாய்களும் ஆர்வத்துடன் சவுத்ரி வீட்டுக்கு பின் தொடர்ந்து வந்துள்ளன. இச்சம்பவத் தின் மூலம், தெரு நாயாக இருந்தாலும் வீட்டு நாயாக இருந்தாலும், நாய்கள் மனிதர்களின் உற்றத் தோழன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘அந்த நாய்கள் இல்லையெனில், இவ்வுலகில் ஒரு குழந்தையை நாம் இழந்திருப்போம். உண்மையில், நாம் தான் நாய்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’ என்றார் சவுத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x