Published : 31 Jan 2017 09:42 AM
Last Updated : 31 Jan 2017 09:42 AM

பாலியல் வழக்கில் அசராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: புதிய எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு

உ.பி.யைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது ஜோத்பூர் ஆசிரமத்தில் பலாத்காரம் செய்ததாக பிரபல சாமியார் அசராம் பாபு மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், அசராம் பாபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, அசராம் பாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாமியாரின் உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஜாமீன் வழங்க கோரினார்.

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அசராம் பாபு தெரிவித்தார்.

ஆனால், சாமியாரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் அளித்தது போன்ற கடிதம் போலியானது என்று தெரிய வந்தது. இதனால் நீதிபதிகள் கடும் கோபம் கொண்டு கண்டனம் தெரிவித்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர், அந்தக் கடிதம் உண்மையானது இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். அத்துடன் மன்னிப்பும் கேட்டு கொண்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘நீதிமன்றத்தில் போலி ஆவணங் களைச் சமர்ப்பிக்க காரணமான வர்கள் மீது புதிய எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை வேண்டும்’’ என்று போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அத்துடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தனர்.

முன்னதாக கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகளிடம் கூறும்போது, ‘‘ராஜஸ்தானில் அசராம் பாபுவுக்கு தேவையான எல்லா சிகிச்சையும் அளிக்க தயார். அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x