Published : 22 Mar 2017 10:17 AM
Last Updated : 22 Mar 2017 10:17 AM

பாபர் மசூதி: உச்சநீதிமன்ற யோசனை - முஸ்லிம்கள் இடையே பரவலாக ஆதரவு இல்லை

அயோத்தி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற யோசனைக்கு முஸ்லிம்கள் இடையே பரவலான ஆதரவு இல்லை.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

ஜாபர்யாப் ஜிலானி, பாபர் மசூதி நடவடிக்கை குழுவின் வழக்கறிஞர்:

நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியம் அல்ல. இந்தப் பிரச்சினையில் ஜெயேந்திரர், முன்னாள் பிரதமர் களான சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் போன்றோர் பேசியும் பலனில்லை. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இவரை நாங்கள் முழுமையாக நம்புவதால், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் அவரால் நியமிக்கப்பட வேண்டும். இந்த யோசனை மீதான இறுதி முடிவை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிப்போம். அதேசமயம், இந்த வழக்கு அன்றாடம் விசாரிக்கப்பட வேண்டும்.

மவுலானா காலீத் ரஷீத், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்:

உச்ச நீதிமன்ற யோசனையை நாங்கள் மதிக் கிறோம். மூத்த மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களிடம் ஆலோசனை செய்த பின்னரே இதில் இறுதிக் கருத்து கூற முடியும். ராமர் கோயில் கட்டுவதை இந்திய முஸ்லிம்கள் என்றுமே எதிர்த்ததில்லை. இந்த உணர்வுப் பூர்வமான பிரச்சினையில் இரு தரப்பினரும் கடந்த காலங்களில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சில அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக அதில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பது அவசியம்.

சையது காசீம் இலியாஸ், பாபர் மசூதி நடவடிக்கை குழுவின் இணை அமைப்பாளர்:

சமாதான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்று அவற்றில் தீர்வு ஏற்படாததால் இனி அதற்கு மீண்டும் வாய்ப்பில்லை. இதில் விஷ்வ இந்து பரிஷத்துடனும் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அந்த முழு நிலமும் ராமருக்கு சொந்தமானது என்கின்றனர். எனவே இந்த பிரச்சினை சட்டப்படிதான் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.

இக்பால் அன்சாரி, பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாசீம் அன்சாரியின் மகன்:

இந்தப் பிரச்சினை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இறந்த எனது தந்தையும் பலமுறை இந்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க முயன்றார். தற்போது நீதிமன்ற தலையீட்டால் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தி இணக்கமான தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும் போது, “அயோத்தி பிரச்சினைக்கு கருத்தொற்றுமை அடிப்படையி லான தீர்வு காணப்பட வேண்டும். இதுவே நீடித்த அமைதி மற்றும் நல்லெண்ணத்தை உறுதி செய்யும். இதற்கு வாய்ப்பு இல்லாவிடில் உண்மைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நீதிமன்ற யோசனையை ஏற்று நடக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்தே, ‘நீதிமன்றம் கூறுவதை ஏற்போம்’ என தாங்கள் கூறி வருவதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x