Last Updated : 22 Mar, 2017 10:22 AM

 

Published : 22 Mar 2017 10:22 AM
Last Updated : 22 Mar 2017 10:22 AM

பாபர் மசூதி: உச்சநீதிமன்ற யோசனை - ஆர்.எஸ்.எஸ்., பாஜக வரவேற்பு



அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள யோச னைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்த அமைப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

மோகன் வைத்தியா, ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர் பாளர்:

பேச்சுவார்த்தை அல்லது சட்டம் இயற்றுவதன் மூலம் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் தெரிவித்த யோசனை வரவேற்கத்தக்கது.

தத்தாத்ரேயா ஹோசபல், ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி:

இந்த பிரச்சினையில் ஆர்எஸ்எஸ் எந்தவிதமான தனிப்பட்ட முடிவையும் எடுக்காது. மாறாக, சாதுக்கள் சபை எடுக்கும் முடிவுக்கு முழுஆதரவு அளிக்கும். ஏனெனில் இவர்கள் தான் ராம ஜென்மபூமி இயக்கத்தை எடுத்து நடத்தி வருவதுடன் அதற்காக நீதிமன்றத்திலும் வாதாடி வருகின்றனர். இந்தப் பிரச்சினை விரைந்து முடிக்கப்பட்டு, இந்தியர்கள் அனைவரின் பங்களிப்புடன் கோயில் கட்டப்பட வேண்டும்.

பி.பி.சவுத்ரி, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர்:

உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ள அருமையான யோசனை இது. பாஜகவும் இந்த யோசனையை கூறி வந்தது. எந்தவொரு பிரச்சினையிலும் வழக்கு தொடுக்கும் முன்பாகவும் அதன் பிறகும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதை அரசு வரவேற்கிறது. பேச்சுவார்த்தையில் கிடைக்கும் பலன், நீதிமன்றத்தால் கிடைக்கும் பலனை விட அதிகம்.

மகேஷ் சர்மா, மத்திய கலாச் சாரத் துறை இணை அமைச்சர்:

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள யோசனை, தீர்வுக்கான மிகப் பெரிய முயற்சியாகும். எனவே, நீதிமன்றத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

பிரவீன் தொகாடியா, விஷ்வ இந்து பரிஷத் தலைவர்:

ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் ராமருக்கு சொந்தமானது என்ற நிலைப் பாட்டை விஹெச்பி ஆதரித்து வருகிறது. முன்னாள் பிரதமர் சந்திரசேகர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அயோத்தி நிலம் ராமருக்கு சொந்தமானது என நாங்கள் அளித்த ஆதாரத்தை ஏற்காமல் முஸ்லிம்கள் வெளிநடப்பு செய்தனர்.

கிரிராஜ் சிங், மத்திய இணை அமைச்சர்:

அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்துக்களின் முக்கிய தெய்வமாக ராமர் திகழ்கிறார். ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த முஸ்லிம்கள் முன்வர வேண்டும். ராமர் கோயில் இந்தியாவில் கட்டப்படவில்லை என்றால், பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திலா கட்டப்படும்?

உமாபாரதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர்:

அயோத்தியின் நிலம் யாருடையதாக இருந்தாலும் அது ராமருக்கு பரிசாக அளிக்கப்பட வேண்டும். இதைவிடப் பெரிய பரிசு உலகில் வேறு எதுவும் இருக்காது. இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டால் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும்.

சுப்பிரமணியன் சுவாமி, பாஜக மூத்த தலைவர்:

அயோத்தியில் கோயில், மசூதி இரண்டும் கட்டப்பட வேண்டும். ஆனால் சரயு நதியின் மறுகரையில் மசூதி கட்டப்பட வேண்டும். ராம்ஜென்ம பூமி முழுவதிலும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். சவுதி அரேபியா மற்றும் பிற முஸ்லிம் நாடுகளில் மசூதியை தொழுகை நடத்தும் இடமாகவே கருதுகின்றனர். மேலும் தொழுகையை எந்த இடத்திலும் நடத்தலாம் என கருதுகின்றனர். பிறந்த இடத்தை நாம் மாற்ற முடியாது. ஆனால் மசூதி எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x