Last Updated : 08 Nov, 2016 12:58 PM

 

Published : 08 Nov 2016 12:58 PM
Last Updated : 08 Nov 2016 12:58 PM

பழங்குடி நபர் கொலை: டெல்லி பேராசிரியர்கள் மீது வழக்கு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பழங்குடி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்டுகள் சிலருடன் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீதும் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்திருந்தாலும், இத்தகவல் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பஸ்தார் சரக போலீஸ் ஐ.ஜி. கூறும்போது, "பழங்குடி நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் நந்தினி சுந்தர், ஜே.என்.யு பல்கலைக்கழக பேராசிரியர் அர்ச்சனா பிரசாத், ஜோஷி அதிகார் சன்ஷ்டான் என்ற அமைப்பைச் சேர்ந்த வினீத் திவாரி, சத்தீஸ்கர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சஞ்சய் பராதே ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்.

அவர்கள் மீது கிரிமினல் சதி (120-பி) , கொலை (302), வன்முறை (147) மற்றும் 148, 149 ஆகிய இந்திய தண்டனைச் சட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய விசாரணையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

4-ம் தேதி நடந்த சம்பவம்:

டொங்பால் பகுதியில் உள்ள நமா கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்நாத் பாகெல். பழங்குடி நபரான இவரை கடந்த 4-ம் தேதி இரவு அவரது வீட்டினுள் புகுந்த ஆயுதம் ஏந்திய நக்சல்கள் சிலர் படுகொலை செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாக பாகெல் நக்சல் எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

கொலை சம்பவம் தொடர்பாக பாகெலின் மனைவி போலீஸில் அளித்த புகாரில், "எனது கணவர் கடந்த மே மாதம் சுந்தருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். அதன் பின்னர் என் கணவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்தன. கடந்த வெள்ளிக்கிழமை என் கணவரை நக்சல்கள் தாக்கும்போதுகூட நந்தினி சுந்தர் மீது ஏன் போலீஸில் புகார் அளித்தாய் என்று கேட்டார்கள். நந்தினி சுந்தருக்கு என் கணவர் கொலையில் தொடர்பு இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

'கோடரி குழு'

நக்சல் ஆதிக்கத்தை எதிர்த்து நமா கிராமவாசிகள் கடந்த ஏப்ரல் மாதம் 'டங்கியா' (தமிழில் கோடரி என அர்த்தம்) என்ற ஒரு பாதுகாப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் குழுவில் உள்ளவர்கள் நக்சல்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது பிரச்சாரத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துவந்த நிலையில், நந்தினி சுந்தர் மற்றும் சிலர் அந்த கிராமத்துக்குச் சென்று மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்க வேண்டாம் என மிரட்டியதாக கிராமவாசிகள் புகார் கூறுவதாக போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார். நந்தினி சுந்தர் அந்த ஊருக்கு ரிச்சா கேசவ் என்ற பெயரில் அரியப்பட்டதாகத் தெரிகிறது.

பழங்குடி நபர் கொலை வழக்கில் பேராசிரியர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விவரங்களை பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துணை வேந்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x