Published : 23 Jan 2015 09:04 AM
Last Updated : 23 Jan 2015 09:04 AM

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் பலி: ஹைதராபாத்தில் மத்திய சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு

தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் அதிகபட்சமாக தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 554 பேர் இந்நோயின் அறிகுறியால் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 173 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மத்திய மருத்துவ குழுவை அனுப்பி வைக்கும்படி தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதன்படி, டாக்டர் அஷோக் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று ஹைதராபாத் வந்தனர். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள காந்தி, உஸ்மானியா அரசு மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை பார்வையிட்டனர். இதில் காந்தி மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளதைக் கண்டு மருத்துவ அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

உடனடியாக தெலங்கானா மாநிலம் முழுவதும் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கும்படியும், தேவையான மருந்துக ள் மற்றும் முகமூடிகளை (மாஸ்க்) இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதுதவிர பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய சிறப்பு மருத்துவ குழு, முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தற்போதைய நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் மருத்துவத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணும், உஸ்மானியா அரசு மருத்துவமனையில் இருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் உஸ்மானியா மருத்துவ மனையில் பணியாற்றும் 3 மருத்துவர் களுக்கும் இந்நோய் அறிகுறி இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களையும் மத்திய மருத்துவ குழு பார்வையிட்டது.

இதனிடையே, காந்தி, உஸ்மானியா மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அந்தந்த மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பன்றிக் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் முகமூடிகளை தராமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதால்தான் டாக்டர்கள், நர்ஸ்களுக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x