Last Updated : 07 Dec, 2016 05:17 PM

 

Published : 07 Dec 2016 05:17 PM
Last Updated : 07 Dec 2016 05:17 PM

பணமதிப்பு நீக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தை முடக்குவதா?- மோடி கண்டனம்

பண மதிப்பு நீக்க விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் செய்வது ஜனநாயக விரோதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “பதற்றத்தையும் சமூக மோதலையும் ஏற்படுத்தும் அரசின் பல்வேறு முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த பல பத்தாண்டுகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பண மதிப்பு நீக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான ஒரு நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன.

ரொக்கப் பரிமாற்றம் குறைந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாடு செல்கிறது. இது தொடர்பாக மக்களிடம் எம்.பி.க்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தலின்போது வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் இது அமைய வேண்டும். முக்கிய சீர்திருத்த நடவடிக்கையான பண மதிப்பு நீக்கத்துக்கு மக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் சில எதிர்க்கட்சிகள் ஜனநாயக விரோதமாக செயல்படுகின்றன. பண மதிப்பு நீக்க விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்றார்.

பண மதிப்பு நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்த இத்தீர்மானத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வழிமொழிந்தார்.

இக்கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தகுந்தது அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்கின்றனர்” என்றார்.

ரொக்கப் பரிமாற்றம் குறைந்த மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி பெட்ரோலிய அமைச்சகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அத்துறையின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இக்கூட்டத்தில் விளக்கினார்.

கோவாவில் மொத்த பரிவர்த்தனையில் 60 சதவீதம் அளவுக்கு ரொக்கமில்லா பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் பணிகளை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கினார்.

இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் விமர்சகர் சோ ராமசாமி, முன்னாள் ஆளுநர் பாய் மகாவீர் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x