Last Updated : 07 Dec, 2016 08:22 PM

 

Published : 07 Dec 2016 08:22 PM
Last Updated : 07 Dec 2016 08:22 PM

பணத்தட்டுப்பாட்டு விவகாரம்: அயல்நாட்டு அரசுகள் இந்தியா மீது கடும் அதிருப்தி

இந்தியாவில் உள்ள தூதரகங்கள், ஊழியர்கள் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளால் அயல்நாட்டு அரசுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

இதே போன்ற ஒரு நடவடிக்கையை அயல்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு, ஊழியர்களுக்கு எடுக்க பல நாடுகள் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள 157 அயல்நாட்டு தூதரகங்கள் சார்பாக குரல் கொடுத்துள்ள டொமினிக்கன் ரிபப்ளிக் தூதர் காஸ்டெலனோஸ், பிரதமர் மோடி இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“எங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள எங்கள் நிதிகளையே எடுக்க முடியாமல் செய்திருப்பது வியன்னா உடன்படிக்கையை கடுமையாக மீறுதலாகும். மேலும் பன்னாட்டு தூதரக கொள்கைகளுக்கும் எதிரானது. இதுதான் பல தூதர்களின் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாரத்திற்கு ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

பல தூதரகங்கள் இந்தியாவின் இந்த பணக் கெடுபிடிகள் குறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ளன. இதே போன்ற ஒரு நடவடிக்கையை அயல்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எடுக்க பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன. எனவே விரைவில் இதற்கு முடிவு காண வேண்டும், இதன் மூலம் அயல்நாடுகளின் நடவடிக்கையை தவிர்க்கலாம்

எல்லா அரசுகளும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நான் கூறவில்லை, ஆனால் சில நாட்டு அரசுகள் மிகவும் சீரியசாக பதில் நடவடிக்கைக்கான சாத்தியங்களை பரிசீலித்து வருகின்றன.

எதுவாக இருந்தாலும் கடைசியில் பிரதமர் முடிவுக்குத்தான் செல்லும் என்பதை நாங்கள் அறிகிறோம், ஏனெனில் மற்றவர்களிடமிருந்து எங்களது கோரிக்கைக்கு ஒரு பதிலும் இல்லை, எனவே ரூ.50,000த்துக்கும் மேலாக பணம் எடுப்பதற்கு அவர் வழிவகை செய்வது அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x