Last Updated : 08 Nov, 2016 09:27 AM

 

Published : 08 Nov 2016 09:27 AM
Last Updated : 08 Nov 2016 09:27 AM

பட்டாசுகள் இல்லாத தீபாவளி: விஞ்ஞானி லஷ்மண் சிங் வலியுறுத்தல்

பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி கொண்டாடும் வகையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என விஞ்ஞானி லஷ்மண் சிங் ராத்தோர் கூறியுள்ளார்.

இந்திய வானிலை துறையின் முன்னாள் தலைமை இயக்குநரான இவர், ஐ.நா. உலக வானிலை மையத்தின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் பல்வேறு குழுக்களின் உறுப்பினராக உள்ளார். டெல்லி காற்று மாசுபாடு குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

டெல்லியில் காற்று மாசுபாடு இதற்கு முன் இந்த அளவுக்கு ஏற்பட்டது உண்டா?

டெல்லியில் இந்த காலகட்டத்தில் பருவநிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு ஏற்பட்டதில்லை. இது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை ஏற்படாத அளவுக்கு உள்ளது.

முதன்முறையாக இந்த அளவுக்கு காற்று மாசுபட்டிருப்பதன் காரணம் என்ன?

இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, மாசுக்களை ஏற்படுத்தும் பொதுமக்களின் செயல்கள். மற்றொன்று, தட்பவெட்ப நிலை. வழக்கமாக மாசு பிரச்சினை ஆண்டு முழுவதிலும் நிலவுகிறது. தரையில் இருந்து சுமார் அரை கி.மீ. முதல் 1 கி.மீ உயரம் வரை தூசுக்கள் பறந்து கொண்டு இருக்கும்.

இவை அன்றாடம் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றபடி, வெயில், மழை, காற்று ஆகியவற்றால் இடம்பெயர்ந்து வீரியம் குறையும். உதாரணமாக, பருவகாலத்தில் வீசும் காற்றால் மாசுக்கள் முழுமையாக துடைத்து எறியப்படுகிறது. கோடையில் கடும் வெயிலினால் மாசுக்கள் நேர்கோட்டில் அதிக உயரம் சென்று பிரிந்து விடும். எனவே, கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக மாசுக்களை விரட்டும் வகையில் தற்போது மழை அல்லது காற்று இல்லாமல் போனது. இதனால் வானில் பரவவேண்டிய மாசுத்துகள்கள் தரையில் இறங்கி விட்டன.

டெல்லியில் இதன் தற்போதைய நிலை என்ன?

டெல்லியில் மாசுபாடு பிரச்சினை ஒரு வாரத்துக்கு முன் தொடங்கிய அளவுக்கு தற்போது இல்லை. இதற்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் எடுத்த முயற்சியும் லேசாக வீசிய காற்றுமே காரணம். இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் ஒருசில நாட்களில் மாசுக்கள் முற்றிலும் விலகி விடும்.

டெல்லி ஒட்டியுள்ள ஹரியாணா மற்றும் பஞ்சாபில் நெல் அறு வடைக்குப் பிறகு பயிர் தாள்களை (அடிப்பகுதி) எரிப்பதே காற்று மாசுபடுவதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளதே?

இந்த காலகட்டத்தில் காரீப் பருவ பயிரில் இருந்து ராபி பருவ பயிருக்கு விவசாயிகள் மாறுவதால் தங்கள் நிலங்களைச் சுத்தப்படுத்துவார்கள். அதிக அளவில் உள்ள இந்த தாள்களுக்கு தீ வைப்பார்கள். இது வழக் கத்துக்கு மாறாக கடந்த சிலநாட்களில் எந்த அளவுக்கு எரிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இத்துடன் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுப் புகையும் ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளன. இந்தப் புகை தற்போதும்கூட காற்றில் கலந்து சுற்றிக்கொண்டுள்ளது.

டெல்லியில் உருவான இந்த மாசுபாடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவி உள்ளது. இது எந்தப் பகுதிவரை செல்லும்?

இந்த மாசு, சிந்து மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகளில் பிஹார் வரை செல்லும். குளிர்காலப் பனியில் இந்த மாசு எளிதில் படர்ந்து கெடுதல் ஏற்படுத்தும். தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இதுபோல் மாசுக்கள் பரவாததன் காரணம் அங்கு பெய்யும் மழையும் வீசும் காற்றும் காரணமாகும். இவை இல்லை எனில் அங்கும் டெல்லியை போன்ற பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.

டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் இதுவரை மாநில அரசு எடுத்த முயற்சிகளால் பலன் கிடைத்ததா?

இந்தப் பிரச்சினையில் அரசை விட பொதுமக்கள் தான் அதிகம் முயற்சிக்க வேண்டும். தனி வாகனங்களுக்குப் பதிலாக ரயில், பேருந்து போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். மாசுக்கள் உருவாகும் அனைத்து வகையான செயல்களையும் பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும். இப்பிரச்சினையில் செயற்கை மழை பெய்ய வைக்கும் அரசு முயற்சியும் பலனளிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த மாசுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவை விட பலமடங்கு அதிகரித்து விட்டது.

வரும் காலங்களில் மாசுக்களைக் கட்டுப்படுத்த என்ன வழி?

கடந்த சில நாட்களில் விவசாயிகள் எரித்த பயிர்களின் அளவைத் துல்லியமாக கணக்கிட்டு அவற்றைக் கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும். இத்துடன் இதற்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

தீபாவளி கொண்டாடும் முறையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவது மிகவும் அவசியமாகும். தற்போது மாறிவிட்ட சுற்றுச்சூழலில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது நமக்கு நல்லதல்ல. பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வது அவசியம். காற்று மாசுபாட்டை தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x