Published : 31 Jan 2017 09:49 AM
Last Updated : 31 Jan 2017 09:49 AM

பஞ்சாப் தேர்தலில் வாக்களிக்க ரம், விஸ்கி, போதை பொருளுக்கு கூப்பன் விநியோகம்: ரகசிய தகவலையடுத்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி முடிகிறது. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் ஆகிய 3 மாநிலங்களில் வரும் சனிக்கிழமை 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பஞ்சாபில் தேர்தலில் பணம் புழங்குவதைத் தடுக்கவும், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவும் மாநில தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பல இடங்களில் ரம், விஸ்கி, பீர் போன்றவற்றுக்கு கூப்பன் வழங்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி.கே.சிங் கூறும்போது, ‘‘தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்க அதிக அளவில் மது பாட்டில்கள் வாங்கி செல்வார்கள். அதனால் முக்கிய மாவட்டங்களில் மதுக் கடைகளைக் கண்காணிக்க உத்தர விட்டிருந்தோம். இதற்கிடையில், 24 மணி நேர புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்ணில் பேசியவர், மது வகைகளை வாக்காளர்களுக்கு வழங்க கூப்பன் வழங்கப்பட்டுள்ளது குறித்து தகவல் தெரிவித்தார். இதுபோல் கூப்பன் வழங்கப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறோம். இதன்மூலம் வாக்களிக்க லஞ்சம் வழங்குவதை தடுப்பது சாத்தியமில்லாதது என்று தோன்றுகிறது. எனினும் கூப்பன்களுடன் வரும் பொதுமக்களைக் கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையில், பழைய காட்டன் மில் ஒன்றில் 10 ஆயிரம் மது பாட்டில்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் இறுதியில் பறிமுதல் செய்தனர். முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், காங்கிரஸ் சார்பில் கேப்டன் அமரிந்தர் சிங்கும் மோதும் லம்பி தொகுதிக்கு அருகில்தான் அந்த காட்டன் மில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற மாநிலங்களைவிட பஞ்சாப் தேர்தலில்தான் வாக்காளர் களுக்கு அதிகளவில் மது, போதை போன்ற பொருட்கள் ரகசியமாக விநியோகிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்க 22 மோப்ப நாய்களைக் களத்தில் இறக்கி உள்ளோம். அதன் பலனாக, காரில் கடத்தி சென்ற 50 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தோம்.

பஞ்சாபில் இளைஞர்கள் அதிகமானோர் போதைக்கு அடிமையாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போதை பொருளுக்கு முடிவு கட்டுவோம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளன. ஆனால், கிலோ கணக்கில் பஞ்சாபில் போதை பொருள் புழங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்பட்ட சமையல் காஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தோம். அதில் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது என்று தேர்தல் அதிகாரி வி.கே.சிங் கூறினார்.

மதுபானங்களை விநியோகிக்க வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கூப்பன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x