Last Updated : 22 Mar, 2017 09:42 AM

 

Published : 22 Mar 2017 09:42 AM
Last Updated : 22 Mar 2017 09:42 AM

நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத பாஜக எம்.பி.க்களுக்கு மோடி கண்டிப்பு

நாடாளுமன்றத்தின் இருஅவை களுக்கு வராமல் தட்டிக் கழிக்கும் பாஜக எம்.பி.க்களை பிரதமர் நரேந்தர மோடி கண்டித்துள்ளார். இதை அவர் நேற்று நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் ஏப்ரல் 12 வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரின்போது ஒரு சில நாட்கள் போதிய அளவுக்கு எம்.பி.க்கள் வருகை தராத காரணத்தினால் இருஅவைகளும் சிலமுறை ஒத்திவைக்கப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் அவசியம் பங்கேற்க வேண்டும். அந்த அளவுக்கும் உறுப்பினர்கள் வருகை குறைந்தால் அவையை நடத்த முடியாது என்பது விதி.

பிரதமராக நரேந்தர மோடி பதவியேற்றதில் இருந்து எந்த கூட்டத்தொடரிலும் போதிய அளவுக்கு உறுப்பினர்கள் இல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் போதிய அளவு உறுப்பினர்கள் வராத காரணத்தினால் இருஅவை கள் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் மத்திய அரசை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் இதனை சுட்டிக் காட்டினார். இந்தநிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி தம் கட்சியின் இரு அவை உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டு அதிர்ந்த பிரதமர் மோடி, பாஜக எம்.பி.க்களை கண்டித்துள்ளார்.

எம்.பி.க்கள் கண்காணிப்பு

இதுகுறித்து பாஜக எம்.பி.க்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பிரதமர் பதவி ஏற்றவுடன் தன் முதல் எம்.பி.க்கள் கூட்டத்தில் அனைவரும் அவை நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். தற்போது உறுப்பினர்களிடையே அவைக்கு வரும் ஆர்வம் குறைந்திருப்பதைக் கண்டு பிரதமர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இனி அனைவரையும் தானே நேரடியாக கண்காணிப்பதாகக் கூறியுள்ளார். இதற்காக தன் சார்பில் ஒரு அதிகாரியையும் நியமிக்கவுள்ளார்’’ எனத் தெரிவித்தனர்.

அமைச்சர் அனந்தகுமாரின் புகாருக்கு சில எம்.பி.க்கள் தாம் நாடாளுமன்ற மத்திய அரங்கில் இருந்ததாகக் கூறினார்கள். ஆனால், இதை ஏற்காத பிரதமர் மோடி, அவர்கள் அவைகளில் இருந்தால் தான் அரசின் வளர்ச்சிக்காக பல மசோதாக்களை நிறைவேற்ற முடியும் எனக் கண்டித்துள்ளார். இதில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் விவாதங்களில் எழும் புகார்களுக்கு பாஜக உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x