Published : 09 Jul 2017 10:57 AM
Last Updated : 09 Jul 2017 10:57 AM

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய கட்டுப்பாடுகளால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தவிப்பு: விஐபி-களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சாதாரண பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக உலகம் முழுவதி லுமிருந்து தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்துவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இணையதளம் மூலம் முன் கூட்டியே ரூ.300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் செயல் படுத்தி வருகிறது. இது படித்த, நகர்ப்புற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால் ரூ.300 கட்டண சிறப்பு தரிசன திட்டத்தால் பாமர மக்கள் மற்றும் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தர்ம தரிசனம் அல்லது திவ்ய தரிசனம் (மலையேறி செல்வது) மூலமாகத்தான் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது.

மேலும், இதற்கு முன்பு ரூ.50 கட்டணம் செலுத்தி சுதர்சன கங்கண டோக்கன் பெறும் முறை அமலில் இருந்தது. இதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திவ்ய தரிசன முறை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தி விஐபி பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம் என தேவஸ்தானம் கருதுகிறது.

மேலும் நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு மற்றும் மானிய விலை லட்டு வழங்கப்படுவதை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தினமும் ரூ.10.5 லட்சத்தை மிச்சப்படுத்தலாம் என கருதுகிறது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்போது கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகி யோருக்கு ‘சுபதம்’ பகுதியில் இருந்து சுவாமியை தரிசிக்க தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். இனி குறிப்பிட்ட தேதியில் மட்டுமே இவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் மாதத்துக்கு 2 முறை மட்டுமே இவர்கள் தரிசிக்க இயலும். ஆனால் விஐபி பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப் படவில்லை.

மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநில விஐபி-களுக்கு மற்ற மாநில விஐபி பக்தர்களைவிட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதவிர, திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் வந்தால் அவர்களை தேவஸ்தான உயர் அதிகாரிகளே வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்கின்றனர்.

எனவே, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, விஐபி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென சாமானிய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x